செய்திகள்

புகார் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டில் நேரடியாக வழக்கு தொடர முடியாது: நீதிபதி உத்தரவு

Published On 2016-09-27 10:52 GMT   |   Update On 2016-09-27 10:53 GMT
புகார் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டில் நேரடியாக வழக்கு தொடர முடியாது என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

குற்ற சம்பவம் தொடர்பாக கொடுக்கப்படும் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

இந்த மனுக்கள் எல்லாம் குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவு 482ன் கீழ் தாக்கல் செய்யப்படுகின்றன.

இவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்களை எல்லாம், ஐகோர்ட்டில் தற்போது நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், இதுபோன்ற வழக்குகள் நீதிபதி முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தது. அப்போது, சட்டப்பிரிவு 482 குறித்து நீதிபதி சில கேள்விகளை எழுப்பினார்.

‘குற்ற புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவு 482ன் கீழ் அதிகாரம் உள்ளதா? பொதுவாக பதிவான குற்ற வழக்கை ரத்து செய்வது தொடர்பாகத்தான் இந்த சட்டப்பிரிவை பயன்படுத்த முடியும். ஆனால், இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி வழக்குப் பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடுகிறோம். போலீசாரும் வழக்குகளை பதிவு செய்கின்றனர்.

இதுமட்டுமல்ல, ஒருபுறம் புகார் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு தான் உத்தரவிடுகிறது. அதன்படி பதிவான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இதே சட்டப்பிரிவின் கீழ் இந்த ஐகோர்ட்டைத்தான் நாடுகின்றனர். அந்த வழக்கையும் இந்த ஐகோர்ட்டு விசாரிக்கிறது. இது எப்படி சாத்தியமாகும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது, இந்த கோர்ட்டில் இருந்த மூத்த வக்கீல்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதன்பின்னர், இதுகுறித்து விரிவான உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதாக நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த உத்தரவை இன்று காலையில் நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஒரு குற்றச் சம்பவம் தொடர்பாக போலீசில் கொடுக்கப்படும் புகார் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால், குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 482ன் கீழ் நேரடியாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது.

முதலில் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் இதுதொடர்பான வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வழக்கை 15 நாட்களுக்குள் விசாரித்து, புகார் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட வேண்டும்.

ஒரு குற்றச்சம்பவம் குறித்து யாராவது புகார் செய்தால், அந்த புகாரை பெற்றுக் கொண்டு உடனடியாக சி.எஸ்.ஆர். என்ற ரசீதை போலீசார் உடனடியாக வழங்கவேண்டும்.

அவ்வாறு வழக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகார் மீது வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், அதற்காக அனைத்து ஆதார ஆவணங்களுடன் ஐகோர்ட்டில் வழக்கு தொடரலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்கை விசாரணைக்கு எடுக்கும்போது, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டும், வழக்குப்பதிவு செய்யாத இன்ஸ்பெக்டர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னர், அந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்கும்.

எனவே, பிரிவு 482ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் நேரடியாக இனி வழக்கு தொடர முடியாது. இந்த சட்டப்பிரிவின் கீழ் தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடியும்.

இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News