செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு உற்சவம் 2-ந்தேதி தொடங்குகிறது

Published On 2016-09-25 17:03 GMT   |   Update On 2016-09-25 17:03 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 2-ந்தேதி நவராத்திரி கொலு உற்சவவிழா தொடங்குகிறது.

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலு அலங்கார அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இக்கொலுவில் சுவாமி திருவுருவ பொம்மைகளுடன் கோவில் விழாக்களின் போது சுவாமி-அம்மன் எழுந்தருளும் சிறப்பு வாகனங்களும் இடம் பெற உள்ளது. மேலும் தெப்பக்குளம், மதுரையில் புகழ்பெற்ற இடங்கள் கொலுவாக அமைத்து வைக்கப்பட உள்ளது.

இக்கோவிலில் நவராத்திரி கொலு உற்சவ விழா வருகிற 2-ந்தேதி தொடங்கி 11-ந்தேதி முடிய நடைபெறும். விழா தொடங்கியதில் இருந்து தினசரி மாலையில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 11-ந்தேதி நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்விழாவையொட்டி பொற்றாமரைக்குளம், கோபுரங்கள், சுவாமி, அம்மன் சன்னதிகள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட இருக்கிறது. மேலும் விழா தொடங்கும் நாளில் இருந்து இசை, சொற்பொழிவு உள்பட பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Similar News