செய்திகள்

செய்யாறு அருகே மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி

Published On 2016-09-25 10:11 GMT   |   Update On 2016-09-25 10:11 GMT
செய்யாறு அருகே மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்யாறு:

செய்யாறு அடுத்த வெங்களத்தூர் பாலாற்று படுகையில் மணல் கடத்தலை தடுக்க வெம்பாக்கம் தாசில்தார் பெருமாள், மண்டல துணை தாசில்தார் ஜெயவேல், வருவாய் ஆய்வாளர் வடிவேல் மற்றும் வருவாய் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பாலாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டு லாரி ஒன்று வெம்பாக்கம்- வெங்களத்தூர் சாலையில் அதிவேகமாக சென்றது. இதனை கவனித்த, தாசில்தார் தலைமையிலான வருவாய் துறையினர் ஜீப்பில் ஏறி லாரியை பிடிக்க விரட்டினர்.

லாரியை மடக்குவதற்காக ஜீப் முந்த முயன்றது. அப்போது, லாரியை ஓரமாக நிறுத்துமாறு டிரைவரை தாசில்தார் எச்சரித்தார். ஆனால் லாரியை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக இயக்கினார். தாசில்தாரும், தொடர்ந்து விரட்டினார்.

சுமார் 15 நிமிட துரத்தல் வேட்டைக்கு பிறகு, லாரியை முந்திய தாசில்தாரின் ஜீப் சற்று தொலைவில் சென்று நிறுத்தப்பட்டது. ஜீப்பில் இருந்து இறங்கிய தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினர் லாரியை நிறுத்துமாறு கூறி கையை அசைத்தனர்.

அப்போது தாசில்தாரை நோக்கி லாரி வேகமாக வந்தது. சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் சாலையில் இருந்து விலகி நின்று தப்பி உயிர் பிழைத்தனர். இதையடுத்து சற்று தொலைவில் லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

மணலுடன் லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து பிரம்மதேசம் போலீசில், தாசில்தார் பெருமாள் புகார் அளித்தார். லாரியை ஏற்றி கொல்ல முயற்சி, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக லாரி உரிமையாளர் வேணு (வயது 40) மற்றும் டிரைவர் ஸ்ரீதர் (33) ஆகிய 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News