செய்திகள்

ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: சேலத்தில் இன்று போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

Published On 2016-09-20 09:45 GMT   |   Update On 2016-09-20 09:45 GMT
ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை போனது குறித்து சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று காலை போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சேலம்:

சேலத்தில் இருந்து சென்னைக்கு எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு உரிய பணம் எடுத்து செல்லப்பட்டது.

இந்த பணம் செல்வதை அறிந்த கொள்ளையர்கள் ரெயில் பெட்டியை துளையிட்டு ரூ. 6 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதில் துப்பு துலங்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முதல் விருத்தாசலம் ரெயில் நிலையம் வரை கடந்த 10 நாட்களாக அதிரடி சோதனை நடந்தது. ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரெண்டுகள் நாகஜோதி, ராஜேஸ்வரி மற்றும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தவிர சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில் சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று காலை போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சிறப்பு பிரிவு அதிகாரி அமித்குமார்சிங் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.

இதில் சி.பி.சி.ஐ.டி. துணை கண்காணிப்பாளர்கள் பால சுப்பிரமணியம், விஜய ராகவன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொள்ளை வழக்கில் சிக்கி உள்ள தடயங்களை வைத்து தீவிர விசாரணை நடத்துவது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News