செய்திகள்

பூண்டி-புழல் ஏரிகள் வறண்டன - சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

Published On 2016-09-07 06:24 GMT   |   Update On 2016-09-07 07:26 GMT
பூண்டி-புழல் ஏரிகள் வறண்டு காணப்படுவதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்படுகிறது.

இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

புழல் ஏரியில் (உயரம் 21.20அடி) 3300 மில்லியன் கனஅடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் (உயரம் 24 அடி) 3645 மில்லியன் கனஅடி தண்ணீரும் சோழவரம் ஏரியில் (உயரம் 17.86 அடி) 881 மில்லியன் கனஅடி தண்ணீரும் சேமித்து வைக்கலாம்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததாலும், கோடை வெயிலாலும், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்தது. தற்போது 4 ஏரிகளும் வறண்டு காணப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் வெறும் 545 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் 601 மில்லியன் கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 110 மில்லியன் கனஅடி. சோழவரம் ஏரியில் 67 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

மொத்தம் 11 ஆயிரத்து 147 மில்லியன் கனஅடி (11.14 டிஎம்சி)க்கு வெறும் 1323 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது.

இதையடுத்து சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதினர்.

ஆனால் கண்டலேறு அணையில் தற்போது தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடமுடியாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Similar News