செய்திகள்

பெரம்பூரில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எரித்து ஆம்ஆத்மி கட்சியினர் போராட்டம்: 25 பேர் கைது

Published On 2016-09-07 03:46 GMT   |   Update On 2016-09-07 03:46 GMT
பெரம்பூரில் உள்ள ஆம்ஆத்மியின் மாநில தலைமை அலுவலகத்தில் ஆம்ஆத்மி நிர்வாகிகள் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி டெல்லி எம்.எல்.ஏ. சோம்நாத்பாரதி உள்பட ஆம்ஆத்மி நிர்வாகிகள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர்:

பெரம்பூர் பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி. காலனி 7-வது தெருவில் ஆம்ஆத்மி கட்சியின் மாநில தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஆம்ஆத்மியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசிகரன் கடந்த 28-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் லஞ்சம் இல்லாத ஆட்சியை அமல்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் அவரை பல்வேறு கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். நேற்று அவர் 10-வது நாளாக தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.

அவரை டெல்லி ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வும், ஆம்ஆத்மியின் தமிழக பொறுப்பாளருமான சோம்நாத்பாரதி சந்தித்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த சோம்நாத்பாரதி “தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா லோக்ஆயுக்தா சட்டத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநில ஒருங்கிணைப்பாளர் வசிகரன் தொடர்ந்து 10 நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.

இதனால் ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு பேரணியாக சென்று முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது” என கூறினார்.

அதனை தொடர்ந்து சோம்நாத்பாரதி தலைமையில் ஆம்ஆத்மி நிர்வாகிகள் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை தீ வைத்து எரித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாருக்கும், ஆம்ஆத்மி கட்சியினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து டெல்லி எம்.எல்.ஏ. சோம்நாத்பாரதி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வசிகரன் மற்றும் ஆம்ஆத்மி மகளிர் அணி நிர்வாகிகள் 3 பேர் உள்பட 25-க்கும் மேற்பட்டோரை போலீசாரை கைது செய்தனர். வசிகரனின் உடல் நலனை கருத்தில் கொண்டு போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சோம்நாத்பாரதி உள்ளிட்ட மற்ற அனைவரையும் பெரவள்ளூரில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைத்தனர்.

Similar News