செய்திகள்

திருப்பூரில் ரூ.570 கோடி பறிமுதல் செய்த விவகாரம்: சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது

Published On 2016-08-08 12:32 GMT   |   Update On 2016-08-08 12:32 GMT
சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திருப்பூரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 16-ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதலில் இந்த பணத்தை எடுத்துச் சென்றவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறப்பட்டது. பின்னர், இந்த பணம் கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என உரிமை கோரியது. இது தொடர்பாக ஆவணங்கள் காட்டப்பட்டதால், பிடிபட்ட பணம் ரிசர்வ் வங்கியின் கணக்கில் சேர்க்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த பணம் யாருடையது? யாருக்காக எங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது? என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரத்தில் மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. தற்போது முதல்நிலை விசாரணையை முடித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், பணத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரிகளின் பதிவெண் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

Similar News