செய்திகள்

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை

Published On 2016-08-06 14:38 GMT   |   Update On 2016-08-06 14:38 GMT
முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் பேராசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே காலி பணி இடத்தை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 13-ல் தொடங்கப்பட்டது. கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 5 பாடப் பிரிவுகளில் 426 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கல்லூரி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இது வரையில் நிரந்தர பேராசிரியர்கள் நியமனம் இல்லை. கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருப்பவர் பரமக்குடி அரசு கல்லூரியில் தற்காலிக பணி மாறுதல் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். 5 பாட பிரிவு மாணவர்களுக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் ஆகிய துறைகளில் தலா இரு கவுரவ பேராசிரியர்களால் மட்டும் வகுப்புகள் நடத்தப்படுவதால் மதியத்திற்கு மேல் கல்லூரியில் வகுப்புகள் நடப்பதில்லை.

இதனால் வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள் மதியத்துடன் வீடு திரும்பும் நிலையால் பாடங்களில் போதிய மதிப்பெண்கள் பெற முடியாத அவலம் உள்ளது. இதனை தவிர்த்து கம்ப்யூட்டர் சயின்ஸ் 3, ஆங்கிலத்திற்கு ஒருவர் என 4 பேர் பெற்றோர், ஆசிரியர் கழக நிதியிலிருந்து பணியாற்றி வருகின்றனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், முதுகுளத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கல்லூரி தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் போதுமான அடிப்படை வசதிகள், நிரந்தர பேராசிரியர்கள் பணியிடங்களை அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. காவிரி குடிநீர் சப்ளை செய்தால் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் அவலத்திற்கு கல்லூரி இயங்கி வருகிறது. பேராசிரியர்கள் பற்றாக்குறை குறித்து ராமநாதபுரம் கலெக்டர், மண்டல துணை இயக்குநர் (கல்லூரி இயக்கம்) மதுரைக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் வரும் ஆண்டுகளில் அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறையும் அபாயம் உள்ளது என்றார்.

Similar News