செய்திகள்

நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததால் வி‌ஷம் குடித்த மாணவி

Published On 2016-08-06 05:21 GMT   |   Update On 2016-08-06 05:21 GMT
சேலம் அருகே திருமணம் செய்ய வற்புறுத்தி நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பூக்காரவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராதா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தாரமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

மாணவியின் தாய்- தந்தை இருவரும் வெளியூரில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்ததால் ராதா அவரது பாட்டி பராமரிப்பில் இருந்து வந்தார். இதனால் மாணவி வீட்டில் இருந்து அருகில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே செட்டிக் கரனூர் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி யான சந்தீப் (26) என்பவர் மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போதும் பின் தொடர்ந்து சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி அந்த மாணவி பள்ளி முடிந்து மாலையில் தோழிகளுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சந்தீப் மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

அதற்கு அந்த மாணவி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சந்தீப் நடுரோட்டில் மாணவியை வலுக் கட்டாயமாக கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியும், சக தோழிகளும் கூச்சலிட்டனர்.

அப்போது சந்தீப் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் உன்னையும், உனது பெற்றோரையும் தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்றும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதனால் அவமானம் அடைந்த அந்த மாணவி வீட்டிற்கு சென்று நடந்தது குறித்து பாட்டியிடம் கூறி அழுதார். பாட்டி அவரை தேற்றினார். ஆனாலும் மனம் உடைந்த மாணவி வீட்டில் இருந்த குருணை மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார்.

இதைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி சந்தீப்பை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Similar News