செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை?: பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2016-06-02 07:41 GMT   |   Update On 2016-06-02 07:41 GMT
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளது?, அதில் எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது?, குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளின் நிலை என்ன? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை எஸ்பிளனேடு பகுதியில் சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தை ராகேஷ், 9 மாத குழந்தை சரண்யா ஆகியோர் மர்ம நபர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டனர்.

இந்த குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் எம்.பி.நிர்மல் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலரை எதிர்மனுதாரராக சேர்க்கின்றோம்.

அவர், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளது? அதில் எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது? குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளின் நிலை என்ன? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Similar News