உள்ளூர் செய்திகள்

தேக்கமடைந்த காய்கறிகள்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தேக்கம் அடைந்த 2 டன் காய்கறிகள்

Update: 2022-06-25 07:19 GMT
  • பார்சல் அனுப்புவதற்கான கட்டண விபரங்கள் தெரியாததால் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 2 டன் காய்கறிகள் தேக்கமடைந்தன.
  • விவசாயிகளுக்கும் தங்கள் விளைபொருட்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

மதுரை கோட்டத்தில் இருந்து வாரத்திற்கு 5 முறை டெல்லிக்கு ரெயில் இயக்கப்படுகிறது. திருக்குறள் எக்ஸ்பிரஸ் மற்றும் சம்மர் கிராந்தி என்ற 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து விளையும் நெல்லிக்காய், முருங்கை, வாழைஇலை, பலா உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதற்காக 24 டன் கொண்ட ஒரு பெட்டி பார்சலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து இதனை வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர். சராசரியாக ஒரு வாரத்திற்கு 8 முதல் 10 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதன்மூலம் ரெயில்வே பார்சல் நிர்வாகத்திற்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுதல் டெல்லி செல்லும் ரெயில்வே பார்சலுக்கான பெட்டியை தனியாருக்கு காண்டிராக்ட் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் பார்சல் அனுப்புவதற்கான கட்டண விபரங்கள் தெரியாததால் திண்டுக்கல்லில் இருந்து டெல்லிக்கு அனுப்ப தயாராக இருந்த நெல்லிக்காய் மற்றும் வாழைஇலை ஆகியவற்றை அனுப்ப முடியவில்லை. 2 டன் காய்கறிகள் தேக்கமடைந்தது.

இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில், ரெயில்வே பார்சலை தனியார் ஒருவர் 5 வருடத்திற்கு காண்டிராக்ட் எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அரசுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.10 கட்டணம் செலுத்தி வருகிறோம். ஆனால் தனியார் நிர்ணயித்துள்ள கட்டண விபரங்கள் முறைப்படி தெரியாததால் விளைபொருட்களை அனுப்ப முடியவில்லை.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில், இனிமேல் சென்னைக்கு கொண்டுசென்று அங்கிருந்துதான் பொருட்களை அனுப்ப முடியும் என்கின்றனர். இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் விளைபொருட்களை அனுப்பமுடியாத நிலை உருவாகும். மாதந்தோறும் சராசரியாக ரூ.25 லட்சம் வரை பார்சல் சேவையில் மட்டும் வருவாய் கிடைத்து வந்த நிலையில் தனியாருக்கு காண்ட்ராக்ட் விடப்பட்டுள்ளதால் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

விவசாயிகளுக்கும் தங்கள் விளைபொருட்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News