செய்திகள்
எம்.ஜி.ஆர். - கமல்

வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தில் எம்.ஜி.ஆர்., கமல் பாடல்களுக்கு தடை

Published On 2021-03-21 10:04 GMT   |   Update On 2021-03-21 10:04 GMT
எம்.ஜி.ஆர்., கமல் பாடல்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் இடமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு பிரசாரத்தை கோடம்பாக்கம் மண்டல அலுவலர்கள் சனிக்கிழமை மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக, அங்குள்ள அண்ணா பூங்காவில் இசை நிகழ்ச்சி வழியே விழிப்புணர்வு செய்தனர்.இசை நிகழ்ச்சியில் இளம் வயதினர் புதிய திரைப்பட பாடல்களை பாடி இறுதியாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கூறி கை தட்டல்களைப்பெற்றனர்.

இளம் வயதினர் பாடிய பாடல்களால் உற்சாகம் அடைந்த அங்கே இருந்த முதியவர் ஒருவர் மைக்கை வாங்கி எம்.ஜி.ஆர். பாடலின் 4 வரிகளைப் பாடினார். இதைக்கேட்டு விழிப்புணர்வுக்காக வந்த தேர்தல் அலுவலர்கள் அதிர்ந்து போயினர்.

சார்... எம்.ஜி.ஆர்., கமல் ஆகியோர் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கிறார்கள், எனவே அவர்களின் பாடல்களை பாடினால் அவர்களது கட்சியை நினைவுபடுத்துவது போலாகி விடும். எனவே அவர்களிள் பாடல்களுக்கு தேர்தல் ஆணைய விழிப்புணர்வு பிரசாரத்தில் இடமில்லை. என விதிகளை நினைவூட்டினார்கள்.

அப்போது வரை இளம்வயதினர் பாடிய துள்ளல் இசைப்பாடல்களைக்கேட்ட முதியவர் தானாக முன்வந்து எம்.ஜி.ஆர். பாடலைப்பாட கடைசியில் அதுவே அவருக்கு தர்மசங்கடமாக முடிந்தது. தேர்தல் காலத்தில் பொதுவெளியில் எம்.ஜி.ஆர். பாடலை பாடக்கூடாதோ என அப்பாவியாய் கேள்வி கேட்டுச்சென்றார்.

Tags:    

Similar News