செய்திகள்
திருச்செந்தூர் தொகுதி

அனிதா ராதாகிருஷ்ணன் நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள திருச்செந்தூர் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-17 06:42 GMT   |   Update On 2021-03-17 07:26 GMT
அனிதா ராதாகிருஷண்ன் 2001-ல் இருந்து தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றுள்ள திருச்செந்தூர் தொகுதி கண்ணோட்டம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திருச்செந்தூர் தொகுதி முக்கியமானது. முருகனின் இரண்டாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில், மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா விமர்சையாக நடைபெறும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலை உள்ளடக்கியது திருச்செந்தூர்.

கடந்த 1952-ம் ஆண்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் சட்டப்பேரவை தொகுதி நீக்கப்பட்டதால் அதில் உள்ள சில பகுதிகள் திருச்செந்தூர் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.



காயல்பட்டினம் நகராட்சி, தென்திருப்பேரை, ஆத்தூர், ஆறுமுகநேரி, கானம், நாசரேத், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி என 7 பேரூராட்சிகளையும், 17 கிராம ஊராட்சிகளை கொண்டது.

இங்கு நெல் விவசாயம், வாழை விவசாயம், வெற்றிலை விவசாயம், முருங்கை விவசாயம், உப்பு உற்பத்தி என பன்முகத்தன்மை கொண்ட தொழில்கள் உள்ளது.

விவசாயிகளுக்கு அடுத்தப்படியாக மீனவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் முக்கிய ஆன்மீக தலமாகவும், மணப்பாடு, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது.



திருச்செந்தூர் தொகுதியில் நாடார் சுமார் 50 சதவீதம் உள்ளனர். அடுத்தபடியாக தலித்துகள் 20 சதவீதம் மற்றும் யாதவர்கள், தேவர், பிள்ளைமார், குறிப்பிட்ட அளவில் உள்ளனர். மேலும் நாசரேத், மெஞ்ஞானபுரம் பகுதிகளில் கிறிஸ்தவர்களும், உடன்குடி, காயல்பட்டினத்தில் முஸ்லிம்களும் வசித்து வருகின்றனர். எனினும் நாடார் ஓட்டுகளே வெற்றியை தீர்மானிக்கிறது.

திருச்செந்தூர் தொகுதி 15 பொதுத்தேர்தல்களையும், 1 இடைத் தேர்தலையும் சந்தித்துள்ளது. அதில் அ.தி.மு.க. 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தி.மு.க. 7 முறையும், விவசாய தொழிலாளர் கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன.



கடந்த 2001-ம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று அமைச்சரானார். தொடர்ந்து தற்போது வரை 4 பொதுத்தேர்தல், ஒரு இடைத்தேர்தல் என 5 தேர்தல்களில் வெற்றி பெற்று 20 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

தற்போது திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 69 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 268 பேரும், 3-ம் பாலித்தனவர்கள் 38 பேர் என மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 375 வாக்காளர்கள் உள்ளனர்.



தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அணைக்கு உட்பட்ட தென்கால் கால்வாய் மூலம் திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட 13 குளங்களுக்கு தண்ணீர் வருகிறது. அதன் மூலம் நெல், வாழை, வெற்றிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. உடன்குடி பகுதியில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுகிறது.

பிரசித்தி பெற்ற ஆத்தூர் வெற்றிலை கொடி விவசாயம் பல ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டு வந்தது. தற்போது போதுமான தண்ணீர், குளப்பாசனம் போன்றவை குறைந்ததால் முன்பைவிட குறைந்த அளவில் வெற்றிலை சாகுபடி நடைபெறுவதால் தங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையம் அமையும்போது இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கும் இப்பகுதி மக்கள் குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்தால் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகள் கூடுதலாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கின்றனர்.



ஆலந்தலை பகுதியில் நடைபெற்றுவரும் தூண்டில் வளைவு திட்டம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆலந்தலை கடற்கரை ஓரத்தில் மீனவ மக்கள் வாழும் பகுதியை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது 31 ஆண்டுகால கோரிக்கை. தற்போது ரூ. 52.46 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செந்தூர் தொகுதி முக்கிய ஆன்மீக தலமாகவும், சுற்றுலா மையமாகவும் இருப்பதால் தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். எனவே அதற்கேற்றார் போல வசதிகள் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

திமுக சார்பில் இந்த முறையும் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார்.



1952- எஸ்.டி. ஆதித்தன் (விவசாய தொழிலாளர் கட்சி)
1957- செல்வராஜ் (காங்கிரஸ்)
1962- செல்வராஜ் (காங்கிரஸ்
1967- பெர்ணான்டோ (தி.மு.க.)
1971- எட்மண்ட் (தி.மு.க.)
1977- அமிர்தராஜ் (அ.தி.மு.க.)
1980- கேசவ ஆதித்தன் (அ.தி.மு.க.)
1984- எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் (அ.தி.மு.க.)
1989- கே.பி. கந்தசாமி (தி.மு.க.)
1991- செல்லத்துரை (அ.தி.மு.க.)
1996- ஜெனிபர் சந்திரன் (தி.மு.க.)
2001- அனிதா ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
2006- அனிதா ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
2009- இடைத்தேர்தல் அனிதா ராதாகிருஷ்ணன் (தி.மு.க.)
2011- அனிதா ராதாகிருஷ்ணன் (தி.மு.க.)
2016- அனிதா ராதாகிருஷ்ணன் (தி.மு.க.)
Tags:    

Similar News