செய்திகள்
வால்பாறை தொகுதி

வால்பாறை தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-02 09:56 GMT   |   Update On 2021-03-02 09:56 GMT
கடல் மட்டத்தில் இருந்து வால்பாறை வட்டம் சுமார் 3,500 அடி உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் கண்ணோட்டத்தை காணலாம்
கோவை மாவட்டத்திலேயே எழில் கொஞ்சும் நிலப்பகுதியை உடைய தொகுதி வால்பாறையாகும். கடல் மட்டத்தில் இருந்து வால்பாறை வட்டம் சுமார் 3,500 அடி உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. மலைப் பகுதியையும், சமவெளிப் பகுதியையும் கொண்ட சட்டப்பேரவை தொகுதி வால்பாறை. இது தனித்தொகுதியாகும்.

சினிமா படங்கள் எடுக்கும் முக்கிய இடமாக வால்பாறை தொகுதியில் உள்ள ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, ஆழியாறு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 500-க்கும் அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில், சூரியன் படம் மூலம் பிரபலமான டாப்சிலிப் பகுதி, டாப்சிலிப்பில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாம், யானை சவாரி போன்றவையும் தொகுதியில் அமைந்துள்ளது.



காமராஜரால் உருவாக்கப்பட்ட நீர்பாசனத்திட்டங்களில் முக்கியமான பி.ஏ.பி. திட்டம் வால்பாறை தொகுதியை நம்பியே உள்ளது.

இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 5 ஆயிரத்து 33 பேர். இதில் ஆண்கள்- 98,617 பேரும், பெண்கள்- 1,06,699 மூன்றாம் பாலினத்தவர்-19 பேரும் உள்ளனர். ஆண்களை விட அதிக பெண் வாக்காளர்களை கொண்ட தொகுதி வால்பாறை தொகுதியாகும்.



மொத்தமுள்ள வாக்காளார்களில் மலைப்பகுதியில் 25 சதவீதம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களிலும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தோட்டத் தொழிலாளர்கள். பெரும்பான்மை வாக்காளர்கள் ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன் புதூர் போன்ற சமவெளிப் பகுதிகளில் உள்ளனர். இந்த தொகுதியில் கவுண்டர், செட்டியார், பட்டியல் இனத்தவர், நாடார், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அதிகளவில் உள்ளனர்.

வால்பாறை தொகுதியில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழிலாக தேயிலை, தென்னை, நெல் விவசாயம் உள்ளது. சமவெளி பகுதிகளில் நெல் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகிறார்கள்.



தொகுதியில் வால்பாறை நகராட்சி, கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், ஓடையகுளம் பேரூராட்சிகள் உள்ளன. இதுதவிர நாயக்கன்பாளையம், அம்பராம்பாளையம் உள்பட பல்வேறு கிராமங்களும் உள்ளன.

இந்த தொகுதி 1962-ம் ஆண்டுக்கு முன்பு பொள்ளாச்சியுடன் இணைந்து இரட்டை தொகுதியாக இருந்தது. 1962-ம் ஆண்டுக்கு பிறகு பொள்ளாச்சியில் இருந்து பிரிக்கப்பட்டு வால்பாறை தனி தொகுதியாக உருவானது. 



அன்றைய நாள் முதல் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க 3 முறையும், அ.தி.மு.க ஜெ அணி ஒரு முறையும், தி.மு.க 3 முறையும், காங்கிரஸ் 3 முறையும், த.மா.கா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது அ.தி.மு.கவை சேர்ந்த கஸ்தூரிவாசு வால்பாறை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

நீண்ட நாள் கோரிக்கை

வால்பாறையில் கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கப்பாதை, நல்லமுடி காட்சிமுனை, நீராறு அணை மற்றும் ஆழியார் அணை, பி.ஏ.பி நீர்ப்பாசன திட்டத்தின் முக்கிய அணையான சோலையாறு அணையும் அமைந்துள்ளது. கடந்த சில வருடங்களாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் இதுவரை வால்பாறை சுற்றுலா தளமாக அறிவிக்கப்படாதது அப்பகுதி மக்களுக்கு ஏமாற்றமாகவே உள்ளது. எனவே வால்பாறையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் சொல்லி வருகின்றனர்.

வால்பாறையில் வசிக்கும் மக்கள் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து தங்கள் குறைகளை சொல்ல வேண்டும் என்றால் 250 கி.மீட்டர் பயணித்து கோவைக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொள்ளாச்சியை மாவட்டமாக்கினால் நன்றாக இருக்கும் என்கின்றனர். வால்பாறை தோட்ட தொழிலாளர்கள், கேரளாவில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.408 போன்ற தின கூலியை கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். 


இதனை நிறைவேற்றி தந்தால் நன்மையாக இருக்கும் என தோட்ட தொழிலாளர்கள் விரும்புகின்றனர். தற்போது வால்பாறை தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் ரூ.336 தினக்கூலியாக பெற்றுவருகின்றனர். இதேபோல் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் 2019-ம் ஆண்டு அறிவித்த ரூ.5 கூலி உயர்வு இரண்டு வருடங்களாகியும் பெற்று தரமுடியவில்லை.

நிறைவேற்றபட்டுள்ள மற்றும் நடைபெற்றுவரும் பணிகள்...

படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 20 ஆண்டு காலமாக குண்டும் குழியுமாக இருந்த தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான எஸ்டேட் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. இதேபோல பல ஆண்டுகாலமாக குண்டும் குழியுமாக இருந்த தனியார் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளது.

பிஏபி திட்டம் உருவாக காரணமாக இருந்த வி.கே. பழனிச்சாமிக்கவுண்டருக்கு ஆழியாறில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருவது விவசாயிகள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை தனி தாலுகா பிரிக்கப்பட்டு, புதிய தாலுகா அலுவகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆழியாறு அணை தூர்வாரப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் மூலம் பல்வேறு கால்வாய்கள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

அ.தி.மு.கவின் பலம்- பலவீனம்

ஆனைமலை புதிய தாலுகாவாக மாற்றப்பட்டது. வால்பாறை சாலைகள் சீரமைக்கப்பட்டது. வால்பாறையில் படகு இல்லம் அமைப்பது, பி.ஏ.பி திட்டம் உருவாக காரணமாக இருந்த வி.கே. பழனிச்சாமிக்கவுண்டருக்கு மணிமண்டபம் அமைப்பது போன்ற திட்டங்கள் அதிமுகவிற்கு பலமாக கருதப்படுகிறது.

2016 தேர்தல் முடிவுகள்

கஸ்தூரி வாசு- அதிமுக- 69980
பால்பாண்டி- திமுக- 61736
மணிபாரதி- இந்திய கம்யூனிஸ்ட்- 3494
முருகேசன். பாஜக- 2565

தேர்தல் வெற்றி





1962- பொன்னய்யா (காங்கிரஸ்)
1967- ராமசாமி (திமுக)
1971- .ராமசாமி (திமுக)
1977- ஆர்.எஸ்.தங்கவேலு (அதிமுக)
1980- ஏ.டி.கருப்பையா (இ.கம்யூ.)
1984- வி.தங்கவேலு (காங்கிரஸ்)
1989- பி.லட்சுமி (அதிமுக. ஜெ)
1991- ஏ.ஸ்ரீதரன் (அதிமுக)
1996- வி.பி.சிங்காரவேலு (திமுக)
2001- கோவை தங்கம் (த.மா.கா.)
2006- கோவை தங்கம் (காங்கிரஸ்)
2011- மா.ஆறுமுகம் (இ.கம்யூ.)
2016- கஸ்தூரிவாசு (அதிமுக)
Tags:    

Similar News