செய்திகள்

வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: சீமான் கோரிக்கை

Published On 2017-01-08 10:14 GMT   |   Update On 2017-01-09 09:31 GMT
வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் பாரம்பரிய உரிமையான காவிரி நதிநீர் உரிமையானது கர்நாடகத்தின் பிடிவாதத்தாலும், மத்தியில் ஆளும் மோடி அரசின் நயவஞ்சகத்தாலும் மறுக்கப்பட்டது. இதன் விளைவாக பாசனத்திற்கு நீரின்றி தான் விளைவித்த நெற்பயிர்கள் கண்முன்னே கருகக் கண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிற செய்தி உள்ளத்தில் உதிரத்தை வரவழைக்கிறது.

இவ்வாண்டு குறுவை, சம்பா என இரு பருவமும் முழுதாகப் பாதிக்கப்பட்டதாலும், கடன்வாங்கி செய்த விவசாயம் நலி வடைந்ததாலும் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டதால் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இம்மாதத்தில் மட்டும் பலியாகியிருக்கிறார்கள்.

ஒரு விவசாயினுடைய மரணம் என்பது ஒரு செய்தியல்ல. பட்டினிச் சாவை எதிர்க்க நோக்கப் போகும் ஒரு நாட்டிற்கான முன்னெச்சரிக்கை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இந்த மரணங்களை தற்கொலையாகக் கூட பதிவுசெய்யமனமில்லாது மவுனம் சாதிக்கிறது அ.தி.மு.க. அரசு.

தைத்திருநாளாம் பொங்கல் நெருங்கிவரும் வேளையில் நிகழ்ந்தேறி வரும் விவசாயிகளின் தொடர் மரணங்கள் விவசாயிகள் தங்களை மாய்த்துக் கொள்வதற்கு தாங்கள் வாங்கியக் கடன்கள் தான் முதன்மை பங்கு வகிக்கிறது. எனவே விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலும், நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளிலும் வாங்கிய கடன்களை அரசே ஏற்று செலுத்த வேண்டும். மேலும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News