செய்திகள்

தமிழகத்தில் 4 மாதத்தில் அரசியல் மாற்றம்: தங்கம்தென்னரசு உறுதி

Published On 2016-12-28 04:12 GMT   |   Update On 2016-12-28 07:52 GMT
தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை பார்க்கும்போது வருகிற 4 மாதங்களில் அரசியல் மாற்றம் ஏற்படும் நிலை உள்ளது என்று தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கூறினார்.
காரியாபட்டி:

விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் விருதுநகர் மல்லாங்கிணறில் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பார்க்கும்போது வருகிற 4 மாதங்களில் அரசியல் மாற்றம் ஏற்படும் நிலை உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியலை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது. 93 வயதில் தி.மு.க.வை கருணாநிதி திறம்பட நடத்தி வருகிறார். அடுத்த தலைமுறைக்கு பொருளாளர் ஸ்டாலின் தலைமை ஏற்க உள்ளார்.

மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி வருகிற 3-ந்தேதி அலங்காநல்லூரில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில் கூறியதாவது:-

தற்போதுள்ள அரசு செயல்படாமல் உள்ளது. அரசு மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். தி.மு.க. விற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. எனவே தி.மு.க.வினர் மக்கள் பிரச்சனையை முன்னெடுத்துச் சென்று அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. அதை தி.மு.க. பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பிரச்சனையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் ஒரே கட்சி தி.மு.க.தான். விருதுநகர் மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமானால் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News