செய்திகள்

காங்கிரஸ் கொடியில் அ.தி.மு.க. நிறத்தை சேர்க்காமல் இருந்தால் சரி: திருநாவுக்கரசருக்கு தமிழிசை பதில்

Published On 2016-12-25 10:12 GMT   |   Update On 2016-12-25 10:12 GMT
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் புறவாசல் வழியாக ஆட்சிக்கு வர பா.ஜனதா முயற்சிக்கிறது என்கிறார். இதற்கு தமிழிசை பதில் அளித்துள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜனதா அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை நல்லாட்சி தினமாக கொண்டாடினார்கள். இதையொட்டி  மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில்  மகத்தான சாதனைகள்  புரிந்த மாபெரும்  தலைவர் வாஜ்பாய். அதேபோன்ற நல்லாட்சியின் ஒரு பகுதியாகத் தான் கருப்பு பண ஒழிப்பு திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.
இந்த திட்டத்தின் பலன்களும், அதற்காக  தாங்க வேண்டிய சிரமங்களும் மக்களுக்கு தெரியும்.

ஆனால் கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிக்க முடியாது என்று சத்திய மூர்த்தி பவனில் கூட்டம் போட்டு ப.சிதம்பரம் விவரமாக பேசுகிறார். வெளியே கூட்டம் போட்டால் மக்கள் ஏற்கவும்  மாட்டார்கள். கேட்கவும்  மாட்டார்கள் என்பது  அவர்களுக்கு புரிந்து விட்டது.

இப்போது இவ்வளவு விபரமாக கூட்டம் போட்டு பேசும் காங்கிரஸ் தலைவர்கள் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல் நடந்ததே அப்போதும்  ஊழலை ஒழிக்க முடியாது என்று பேசியிருக்கலாமே.
காங்கிரசார் ஊழலை ஒழிக்க முடியாது. வளர்த்தவர்களால் அழிப்பதற்கு எப்படி மனம்  வரும்? எங்களால் ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. துணிச்சல் இருக்கிறது.

அடிப்படை கட்டமைப்பில் புரையோடி கிடக்கும் கருப்பு பணத்தை அகற்றும் முயற்சிதான் நடக்கிறது. கருப்பு பணத்தை பதுக்கினால் ஊழலில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்  என்பதுதான் தலைமை செயலாளர் வீட்டில் நடந்த சோதனை.

கடந்த ஆட்சியில் அரசியல் ரீதியாக வருமான வரித்துறையை பயன்படுத்தினார்கள். நாங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்து இருக்கிறோம்.

மத்திய அரசு உள்நோக்கத்தோடும், சுயநலத்தோடும் செயல்படுவதாக  சொல்கிறார்கள். அப்படியானால் தலைமை செயலாளர் வீட்டில் சிக்கிய பணம், தங்கம், சொத்துக்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் புறவாசல் வழியாக  ஆட்சிக்கு வர பா.ஜனதா முயற்சிக்கிறது என்கிறார். அதற்கான அவசியம் எங்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட  செயலில் பா.ஜனதா ஈடுபடவும் செய்யாது.

ஆனால் அ.தி.மு.க. கட்சியை ஒட்டியே  கட்சியை நடத்தி செல்லும் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கொடியுடன் அ.தி.மு.க. கொடியின் கருப்பு, சிவப்பு, வெள்ளை வர்ணத்தையும் சேர்க்காமல் இருந்தால் சரிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News