என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • சட்டம் அனைவருக்கும் சமமானது. இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுகிறார்கள்.
    • ரேவந்த் ரெட்டி தலைசிறந்த வீரர். அவர் YSRC போல் செய்யவில்லை.

    "புஷ்பா 2" படத்தின் சிறப்பு காட்சியை அல்லு அர்ஜுன் தியேட்டரில் சென்று பார்க்கும்போது கூட்டல் நெரிசல் ஏற்பட்டு 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அபாய கட்டத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். ஒருநாள் இரவு முழுவதும் சிறையில் இருந்த நிலையில் இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் வந்தார்.

    வெளியில் வந்த அவர் பல பிரபலங்ககள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை யாரும் சென்று பார்க்கவில்லை. இது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை யாரும் சென்று பார்க்கவில்லை. ஆனால் தெலுங்கானா திரையுலகம் அல்லு அர்ஜுன் பக்கம் நிற்கிறது என தெலுங்கான மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில்தான் அல்லு அர்ஜூன் விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாணிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பவன் கல்யாண் பதில் கூறியதாவது:-

    சட்டம் அனைவருக்கும் சமமானது. இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுகிறார்கள். எனினும், தியேட்டர் ஊழியர்கள் அங்கிருந்த சூழ்நிலை குறித்து முன்னதாகவே அல்லு அர்ஜுனிடம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் இருக்கையில் அமர்ந்ததும், நெரிசலை கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை முன்னதாகவே அல்லு அர்ஜுன் சந்தித்திருக்க வேண்டும். அப்படி சந்தித்திருந்தால் டென்சன் எளிதாகியிருக்கும்.

    ரேவந்த் ரெட்டி தலைசிறந்த வீரர். அவர் YSRC போல் செய்யவில்லை. அவர் சிறப்பு காட்சிகளை அனுமதித்ததுடன், டிக்கெட் விலையையும் ஏற்றினார். இருப்பினும் இந்த விஷயத்தில், அல்லு அர்ஜுன் விசயத்தில் திரைக்கு முன்னோ அல்லது பின்னோ என்ன நடந்தது என்பது எனக்கு முழுமையாகத் தெரியாது.

    ஒரு முதல்வராக என்னுடைய பொறுப்பு சட்டத்தை நிலை நாட்டுவதுதான். எனக்கு எந்த தனிப்பட்ட விருப்பங்களும் இல்லை.

    எனது சகோதரர் சிரஞ்சீவி படம் பார்க்க செல்லும்போது இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கு மாஸ்க் அணிந்து செல்வார்.

    இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.

    • 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.
    • பழவேற்காடு பகுதி மீனவர்கள், ராக்கெட் ஏவுதலின்போது கடலுக்கு செல்ல வேண்டாம்

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கிபட்டது.

    இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.இந்நிலையில் விண்வெளியில் டிராபிக் ஜாம் ஆகியுள்ளதால் ராக்கெட் 2 நிமிடம் தாமதாக 10.00 மணிக்கு ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    ஒரே சுற்றுப்பாதையில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களுடன் சிக்கும் [conjunctions] என்பதால் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ் சோமநாத் தெரிவித்தார்.

    ராக்கெட்டின் சுற்றுப்பாதை மற்றும் பறக்கும் பாதையில் உள்ள நெரிசல் காரணமாக இஸ்ரோ இதற்கு முன்னரும் ஏவுதலை தள்ளி வைத்திருக்கிறது என்பதால் இது சகஜமான ஒன்றே என்று கூறப்படுகிறது.

    தற்போது ஏவப்படும் ராக்கெட் , ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்று வட்டப்பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகின்றன.

    இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு பகுதி மீனவர்கள், ராக்கெட் ஏவுதலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும் தமிழக மீன்வள எச்சரித்துள்ளது. 

    • வடை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு தீபராதனை நடந்தது.
    • சாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் இன்று காலை முதல் குவிந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பாபவிநாசம் சாலையில் உள்ள ஜபாலி மலையில் அனுமன் பிறந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

    ஜபாலி மலையில் உள்ள அனுமனுக்கு இன்று காலை பல்வேறு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது.

    பின்னர் அனுமனுக்கு பட்டு வஸ்திரங்கள் உடுத்தி, வடை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு தீபராதனை நடந்தது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அவர் பிறந்த இடத்தில் சாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் இன்று காலை முதல் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 84 950 பேர் தரிசனம் செய்தனர். 21,098 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 6 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆந்திராவில் சேவல் சண்டைக்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது.
    • சேவல் சண்டைகள் பங்கேற்பவர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பந்தயம் கட்டுகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையின் போது சேவல் சண்டை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    ஆந்திரா மாநிலம் அன்னமய்யா விஜயநகரம் கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், விசாகப்பட்டினம் வட ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் சண்டை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    சண்டை சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி பந்தயம் நடத்துவதால் அதனை கண்டுகளிக்கும் பொதுமக்கள் மீது சேவல்கள் விழும் போது அதன் கால்களில் கட்டப்பட்டுள்ள கத்தியில் வெட்டுப்பட்டு பலர் உயிரிழந்து உள்ளனர். இதனால் ஆந்திராவில் சேவல் சண்டைக்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது.

    போலீசாரின் தடையை மீறி சங்கராந்தி தொடங்குவதற்கு முன்பே தற்போது வட ஆந்திராவில் ஆங்காங்கே சேவல் சண்டை நடந்து வருகிறது. தொடங்கியுள்ள சேவல் சண்டை பிப்ரவரி மாத கடைசி வரை நடைபெறும்.

    போலீசார் சேவல் சண்டை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் பந்தய நடத்துபவர்கள் புதிய இடங்களை தேர்வு செய்து சேவல் சண்டை நடத்தி வருகின்றனர். சேவல் சண்டைகள் பங்கேற்பவர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பந்தயம் கட்டுகின்றனர். இதனால் சேவல் சண்டையில் பல கோடி ரூபாய் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.

    அனகா பள்ளி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சேவல் சண்டை நடத்தி க்கொண்டு இருந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சண்டை சேவல்களையும், ரூ.60 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் நிதிஷ் ரெட்டி சதமடித்தார்.
    • நிதிஷ் குமார் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமராவதி:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

    பாக்சிங் டே என பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் அடித்தார்.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்னுடனும், சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்த இந்திய அணியை இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர்-நிதிஷ் ரெட்டி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தியது. வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

    நிதிஷ் ரெட்டிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இது முதலாவது சதமாகும். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் குறைந்த வயதில் டெஸ்ட் சதமடித்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ் ரெட்டி படைத்தார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

    இந்நிலையில், முக்கியமான தருணத்தில் மெல்போர்னில் சதமடித்து அசத்திய நிதிஷ் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    நிதிஷ் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா மற்றும் சுஷ்மா ஆகியவரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரம் அடுத்த யண்ட கண்டியை சேர்ந்தவர் துளசி. இவர் அதே பகுதியில் வீடு கட்டி வருகிறார். அவரது வீட்டிற்கு கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் மரப்பெட்டி ஒன்று வந்தது.

    துளசி மரப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ஆண் பிணம் இருந்தது.

    மேலும் மரப்பட்டியில் ரூ.1.30 கோடி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் ஒன்று இருந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


    விசாரணையில் துளசியின் சகோதரி ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா ஆகியோர் பர்லையா என்ற கூலி தொழிலாளியை கொலை செய்து பிணத்தை அனுப்பி வைத்தது தெரிய வந்தது.

    போலீசார் ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா மற்றும் சுஷ்மா ஆகியவரை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பக்தர்கள் காத்திருப்பு அறைகள் நிரம்பி வழிந்தன.
    • ரூ. 4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு நெருங்குவதையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்பதாலும் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் காத்திருப்பு அறைகள் நிரம்பி வழிந்தன. தரிசன டோக்கன் இல்லாமல் நேரடி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ரூ.300 விரைவு தரிசனத்தில் 4 மணிநேரத்திலும், இலவச நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 3 முதல் 4 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    நேற்று 66,715 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 24,503 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதற்கு தகுந்தாற்போல் பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் திருப்பதிக்கு வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து செய்து வருகின்றனர்.

    • டிக்கெட்டுகள் வழங்க 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி ஜனவரி 10-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இந்த 10 நாட்களுக்கு உண்டான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 25 நிமிடத்தில் 1.40 லட்சம் டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.

    ஆனால் இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி மேற்கொண்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த 10 நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 இடங்களில் வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுண்டர்கள் ஏற்பாடு செய்வதை செயல் அதிகாரி ஷியாமலா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரியுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு உண்டான 1.20 லட்சம் இலவச சர்வதரிசன டோக்கன்கள் ஜனவரி 9-ந்தேதி காலை 5 மணிமுதல் தொடர்ந்து வழங்கப்படும்.

    3 நாட்களுக்கான டோக்கன்கள் முடிந்த பின்னர், அந்தந்த நாட்களுக்கு டோக்கன்கள் முந்தைய நாள் வழங்கப்படும்.

    இதற்காக திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுண்டர்களும், திருமலையில் 4 கவுன்டர்களும் என மொத்தம் 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண் பித்து டோக்கன் பெற வேண்டும். இந்தமுறை முறைகேடுகள் நடக்காமல் இருக்க டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அவர்களின் புகைப்பட அடையாளத் துடன் கூடிய டோக்கன் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 73,301 பேர் சாமி தரிசனம் செய்தனர்.26,242 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    ரூ.4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி ஓரிரு நாட்களில் தொடங்க இருக்கிறது.
    • செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டதாகும்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளியில் செயற்கைக்கோள் மற்றும் விண்கலங்களை இணைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்வதற்காக 'ஸ்பேடக்ஸ்' என்ற திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.

    இதனை ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.

    இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். குறிப்பாக ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி ஓரிரு நாட்களில் தொடங்க இருக்கிறது. இதனை தொடர்ந்து இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 29-ந்தேதி இருக்க வாய்ப்பு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    'சேசர்' (எஸ்.டி.எக்ஸ்-01) மற்றும் 'டார்கெட்' (எஸ்.டி.எக்ஸ்-02) என்ற இரண்டு செயற்கைகோள்களை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டதாகும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ராக்கெட் ஏவுவதை நேரில் பார்வையிடுவதற்காக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் இந்த ராக்கெட் ஏவுவதை பார்வையிட விரும்பும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறித்த விவரங்களை https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ள வேண்டும்' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • மாணவிக்கு விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை அதிகாரி மதுசூதனன், கலெக்டர் நாகலட்சுமிக்கு தெரிவித்தார்.
    • விடுதியில் உள்ள மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொண்டதாக விடுதி வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் தர்ஷி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் குண்டூரில் உள்ள சமூக நலத்துறை அரசு மாணவியர் விடுதியில் தங்கி இருந்து பார்மசி கல்லூரியில் படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து தனியாக விடுதியின் மாடிக்கு சென்ற மாணவிக்கு சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனைக் கண்ட விடுதி வார்டன் மற்றும் சக மாணவிகள் குழந்தை பெற்ற மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவிக்கு விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை அதிகாரி மதுசூதனன், கலெக்டர் நாகலட்சுமிக்கு தெரிவித்தார். விடுதியில் உள்ள மாணவிகளிடம் அலட்சியமாக நடந்து கொண்டதாக விடுதி வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து கலெக்டர் உத்தரவிட்டார். அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தனது உறவினர் ஒருவரிடம் கடந்த 7 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்ததால் கர்ப்பமானதாகவும், கர்ப்பம் அடைந்தது வெளியே தெரியாமல் இருப்பதற்காக இறுகிய ஆடைகளை அணிந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

    மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான அவரது உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற்று தராமல் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வழங்கி உள்ளார்.
    • பக்தர்கள் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து சில பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி வந்தனர்.

    அவ்வாறு வந்த பக்தர்களில் ஹரிபாபு, ஜெகதீஸ் ஆகிய இருவரை போலீஸ்காரர் சந்திரசேகர் என்பவர் அணுகி, வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

    இதற்காக வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்க அவருக்கு எம்.எல்.ஏ பரிந்துரை கடிதம் பெற வேண்டும் என ரூ.20 ஆயிரமும், மற்றொரு பக்தருக்கு 6 டிக்கெட்கள் பெற எம்.எல்.சி.யின் பரிந்துரை கடிதம் பெற வேண்டும் என ரூ.50 ஆயிரத்தை சந்திரசேகர் பெற்று கொண்டார்.

    ஆனால் பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் பெற்று தராமல் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வழங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    அதனடிப்படையில், விஜிலென்ஸ் அதிகாரிகள் போலீஸ்காரர் சந்திரசேகரை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பக்தர்கள் சென்ற வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக திடீரென மோதியது.
    • 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டம் குடி பண்டா மற்றும் அமரபுரம் பகுதியை சேர்ந்த 14 பக்தர்கள் வாடகை வேனில் திருப்பதிக்கு வந்தனர்.

    ஏழுமலையானை தரிசித்து விட்டு நேற்று இரவு வேனில் வீடு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். மடக சிரா, புல்ல சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்துகொண்டு இருந்தது. அப்போது சாலையோரம் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டு இருந்தது. பக்தர்கள் சென்ற வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக திடீரென மோதியது.

    இதில் வேனில் இருந்த 4 பக்தர்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக இந்துபுரம் மற்றும் பெங்களூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×