லைஃப்ஸ்டைல்

கஷ்டம் நிரந்தரமில்லை....நடப்பதெல்லாம் நன்மைக்கே....

Published On 2017-09-08 06:04 GMT   |   Update On 2017-09-08 06:04 GMT
இப்போது அனுபவிக்கும் கஷ்டம் நிரந்தரமில்லை என்ற எண்ண ஓட்டத்தில் பயணத்தை தொடர்ந்தாலே நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற பக்குவம் ஏற்பட்டுவிடும்.
ஏதாவது ஒரு விஷயம் மனதை குழப்பிக்கொண்டிருந்தால் அது பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருக்க வேண்டியதில்லை. நிறைய பேர் தாங்கள் சந்திக்கும் கஷ்டங்களை கண்டு மனதொடிந்து போய்விடுவார்கள். இனி தமது வாழ்க்கை அவ்வளவுதான் என்று வெறுத்துவிடுவார்கள். யாரிடமும் பேச மனமின்றி தனிமையில் முடங்கி கிடப்பார்கள்.

சரியாக சாப்பிடாமல், தூங்காமல் நடந்ததை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள். எதையோ இழந்தது போல சோக மயமாக காட்சியளிப்பார்கள். தேவைக்கு அதிகமாக நடந்த விஷயங்களை பற்றியே நினைத்து ஏங்குவார்கள். இப்போது எதிர்கொண்டிருக்கும் அந்த கஷ்டம் நிரந்தரமானது அல்ல என்பதை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்ள மாட்டார்கள்.

இதே நிலை தொடர்ந்து நீடிக்குமா? என்று யோசித்து பார்த்தாலே கஷ்டங்களை கண்டு கலங்க வேண்டியதில்லை. ஏனெனில், இதைவிட மன வேதனைக்குள்ளாக்கிய கஷ்டங்களை கடந்த ஆண்டில் எதிர்கொண்டிருப்பார்கள். அதை நினைவுபடுத்தி பார்த்தாலே மனம் இலகுவாகிவிடும்.



அந்த சமயத்தில் சில நாட்கள் மனவருத்தத்தில் துவண்டுபோய் இருந்திருப்பீர்கள். அப்போது கஷ்டங்களெல்லாம் மலைப்பாக தோன்றியிருக்கும். எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று தடுமாறியிருப்பீர்கள். மனதை திடப்படுத்திக்கொண்டு படிப்படியாக கஷ்டங்களில் இருந்து மீண்டு வந்திருப்பீர்கள். நாளடைவில் அதனை அடியோடு மறந்து போயிருப்பீர்கள்.

அதை போன்ற கஷ்டங்கள் திரும்ப வரும்போது ஒருமுறைக்கு, இருமுறை எப்படி கஷ்டங்களை கையாண்டோம் என்பதை நினைவுப்படுத்தி பார்த்தாலே போதும். அதில் இருந்து எளிதில் மீண்டு வந்துவிடலாம்.

ஒருசில நேரங்களில், ‘இந்த சின்ன விஷயத்துக்காகவா அப்போது அப்படி மனவேதனை அடைந்தேன்’ என்று நினைக்க தோன்றும். கஷ்டங்கள் நிரந்தரமானது என்று தப்புக்கணக்கு போடுவதுதான் மனக்கலக்கத்திற்கு காரணம். இப்போது அனுபவிக்கும் கஷ்டம் நிரந்தரமில்லை என்ற எண்ண ஓட்டத்தில் பயணத்தை தொடர்ந்தாலே நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற பக்குவம் ஏற்பட்டுவிடும்.
Tags:    

Similar News