லைஃப்ஸ்டைல்

காதலால் பாழாகும் பள்ளி-கல்லூரி மாணவிகளின் வாழ்க்கை

Published On 2017-03-01 06:51 GMT   |   Update On 2017-03-01 06:51 GMT
காதல் என்ற சுழலில் சிக்கி வாழ்க்கையை தொலைப்பது மாணவிகள் தான். பெற்றோரின் கவனிப்பில், கண்காணிப்பில் இருந்து தவறும் மாணவிகள் தான் இந்த மாய வலையில் விழுந்து, வீணாய் போகின்றனர்.
பள்ளி, கல்லூரி பருவம் ஒவ்வொரு மாணவ-மாணவிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை உருவாக்கும் பருவம். அந்த பருவத்தில் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். சமீப காலமாய் பள்ளிப்பருவம் சிலருக்கு காதலோடு தான் பயணிக்கிறது. சிலருக்கு பள்ளி, கல்லூரி பருவத்தில் வரும் காதலோடு, காலமும் காலாவதியாகி விடுகிறது.

பள்ளி பருவத்தில் வரும் காதல் பஞ்சு மிட்டாய் போன்ற தோற்றம் கொண்டதுதான். பஞ்சு மிட்டாய் பார்க்கும் போது அழகாகவும், உள்ளே ஏதோ இருப்பது போன்ற தோற்றத்தில் பெரியதாகவும் இருக்கும். ஆனால், கையில் அழுத்திப் பிடித்தால் சுருங்கிப் போகும். அதன்பின், இதுவரை அது கொண்டு இருந்த அழகும் காணாமல் போய்விடும். இதுபோன்றதுதான் இன்றைய பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் பருவ காதல்.

ஆனால் அதன் மாயை தோற்றத்தில் மயங்கி, பல பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் மூளை மழுங்கிப் போகிறது. காதல் என்ற மூன்றெழுத்து சுழலில் சிக்கி வாழ்க்கையையே தொலைக்கின்றனர் பலர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது மாணவிகள்தான். பெற்றோரின் கவனிப்பில், கண்காணிப்பில் இருந்து தவறும் மாணவிகள் தான் இந்த மாய வலையில் விழுந்து, வீணாய் போகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் சமீப காலமாக இந்த பஞ்சுமிட்டாய் காதல் அதிகம் பூக்கிறது. “இந்த பூக்கள் மாலைக்கு உதவாது” என்பதுபோல், “பள்ளிக்காதல் வாழ்க்கைக்கு உதவாது” என்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களிடம் இல்லை. பக்குவப்பட்ட வயது இருந்தும், காதல் வந்து விட்டால் யாரும் பார்த்துவிடக் கூடாது என்று ஒளிந்து, ஒளிந்து காதல் செய்த காலம் எல்லாம் மலையேறி போய் விட்டது. இப்போது பள்ளிக் காதல் கூட, பஸ் நிலையங்களில் பலரின் முன்பே வளர்கிறது.

கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி என மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள பஸ் நிலையங்களில் பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரி பருவக் காதல் கண் சிமிட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு கண் சிமிட்டலுடன், கைகோர்த்து உலா வரும் போது சில நேரங்களில் போலீசிலும் சிக்கிக் கொள்கின்றனர். பல நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.



சமீபத்தில் கடலூர் பாரதி சாலையில் உள்ள சிறுவர் பூங்காவில் பள்ளி சீருடையில் ஒரு மாணவியும், டிப்-டாப் உடை அணிந்திருந்த வாலிபர் ஒருவரும் வந்திருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் கட்டி பிடித்துக்கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதை சிறுவர்களை விளையாடுவதற்காக அழைத்து வந்திருந்த பெற்றோர்கள் பார்த்து முகம் சுழித்தனர். மேலும் அவர்கள் இது பற்றி போலீசிடம் தெரிவித்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் இருவரும் காதலர்களாம். அந்த மாணவி 9-ம் வகுப்பும், அந்த வாலிபர் கல்லூரியில் படித்துக் கொண்டும் இருக்கிறார். இவர்களுக்குள் காதல் பூ ஒரு ஆண்டுக்கு முன்பே மலர்ந்து விட்டதாம். அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

கடலூர் சில்வர் பீச்சுக்கு காற்று வாங்கலாம் என்று யாரும் சென்றால், அங்கு காதல் காற்றுதான் பலமாய் வீசுகிறது. ஆம். பள்ளிச் சீருடையில் மாணவியும், பஞ்சுமிட்டாய் நிறத்தில் ஆடை உடுத்திக் கொண்டு வாலிபர்களும் வழி மேல் விழி வைத்து பேசிக் கொண்டு இருப்பதை பார்க்கலாம். அதிலும், சில மிட்டாய் காதல் இருக்கிறது. மாணவிகளுக்கு சாக்லெட், மிட்டாய் வாங்கி வைத்துக் கொண்டு அதை கையிலும் கொடுக்காமல், பையிலும் வைக்காமல் வித்தை காட்டி விளையாடுகின்றனர்.

மதிய நேரத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காதலர்கள் ஜோடி, ஜோடியாக ஆங்காங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை காணமுடிகிறது. சில ஜோடிகள் மறைவான இடத்தை தேடிச்செல்கிறார்கள். அங்கு அருவருப்பான காட்சிகள் அரங்கேறுகிறது. சில மாணவிகள் தங்களது வீட்டில் இருந்து பள்ளி சீருடையில் வருகின்றனர். அவர்கள் கடலூரில் உள்ள பொது கழிப்பறைக்கு சென்று, சாதாரண உடையை மாற்றிக்கொண்டு காதலனுடன் சுற்றித்திரிகின்றனர். பின்னர் மாலையில் அதேபோல் பொதுகழிப்பறைக்கு சென்று, சீருடையை மாற்றிக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார்கள்.

பள்ளி செல்லும் மாணவிகள் பள்ளிச் செல்லாமல் திடீரென மாயமாவதும், கண்ணீர் மல்க புகாரை எழுதிக் கொண்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்து நடவடிக்கை எடுக்க கெஞ்சுவதும், சில நாட்கள் இடைவெளியில் காதலனுடன் சேர்ந்து மாணவியை மீட்டு வருவதும் சமீப காலமாக அதிகம் நடக்கும் சம்பவங்களாக உள்ளன.

காதல் எனும் மாயை, கண்ணை மறைப்பதால் சில மாணவிகள் தங்களின் பெற்றோரது கண்ணீரையும், கவலையையும் மறந்து காதலில் விழுகின்றனர். பின்னர் காலத்தை உணர்ந்து கவலையில் வீழ்கின்றனர். பள்ளி, கல்லூரி பருவத்தில் வருவது காதல் அல்ல. அது பெற்றொருக்கான கவலை. வாழ்க்கையை சீரழிக்கும் கொடூர நோய் என்பதை மாணவிகள் உணர வேண்டும்.

தங்கள் பிள்ளை குழந்தையாகவே இருக்கிறது என்ற எண்ணத்தை விட்டு, விட்டு மகள் பருவ வயதை எட்டி விட்டால், உலக நடப்புகளையும், உள்ளூர் நடப்புகளையும் புரிய வைத்து, அவர்களை நல்வழியில் பயணிக்க வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. இல்லையேல், இந்த பஞ்சு மிட்டாய் காதல் ஆசையில் பாழாய் போவது மாணவிகளின் வாழ்க்கையும், கலைந்து போவது பெற்றொரின் கனவுகளும் தான். இன்றைய காலத்தில் பெண்களை பெற்ற பெற்றோர்களே உஷாராக இருப்பது நல்லது.

Similar News