லைஃப்ஸ்டைல்

நேர்மை இயல்பாகவே இருக்க வேண்டிய அடிப்படை பண்பு

Published On 2017-02-20 04:02 GMT   |   Update On 2017-02-20 04:02 GMT
நேர்மையின்றி நடந்தாலும் தவறில்லை என்கிற நிலையில் இருப்பவர்கள் நேர்மை தீபத்தை ஏற்றும்போது அதிகப் பாராட்டுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிறார்கள்.
நேர்மையை பெருமையாக நாம் சிலாகிக்கிறோம். அது இயல்பாகவே இருக்க வேண்டிய அடிப்படை பண்பு.

நேர்மை என்பது பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. மனம் சம்பந்தப்பட்டது. செய்கிற பணியை செம்மையாகச் செய்வதும், உழைப்பைத் தவமாய் ஆக்குவதும், அலுவலகமே அவனியாய்க் கருதுவதும், திருப்தி வரும் வரை திருத்தங்கள் செய்வதும் நேர்மையின் அம்சங்கள். குறைந்த மூலாதாரங்களைக்கொண்டு உயர்ந்த பொருளை உலகத்தரத்தில் உற்பத்தி செய்வது நேர்மையின் வெளிப்பாடு.

வசதிபடைத்தவர்களும், வெளிச்சம் மேலே விழுபவர்களும் கடைப்பிடித்த நேர்மையான நடவடிக்கைகளை செய்தித்தாள்கள் அவ்வப்போது வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. மதில்மேல் பூனையாய் இருக்கும் பலருக்கு அது தூய்மையை நோக்கிப் பயணிப்பதே நன்று என்பதை வலியுறுத்துகிறது.

எப்போதும் பணியையே பக்தியாக, அதில் வரும் மகிழ்ச்சியையே விருதாக, அது ஏற்படுத்தும் பலனையே பத்திரிகைச் செய்தியாகக் கருதி வாழ்பவர்களுக்கு விரக்தி ஏற்படாமல் இத்தகைய செய்திகள் ஊக்கம் ஊட்டுகின்றன.

வறுமையில் வாழ்பவர்கள், எதிர்காலக்கரை எங்கிருக்கிறது என்று தெரியாத தோணியாய் தத்தளிப்பவர்கள், உத்தரவாதமில்லாத வாழ்வின் வழிப்போக்கர்கள்கூட நேர்மையை நெஞ்சத்தில் வைத்து அணையாமல் அதைப் பாதுகாப்பது போற்றப்பட வேண்டிய நிகழ்வுகள்.

நேர்மையின்றி நடந்தாலும் தவறில்லை என்கிற நிலையில் இருப்பவர்கள் நேர்மை தீபத்தை ஏற்றும்போது அதிகப் பாராட்டுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிறார்கள்.

செல்வந்தர்கள் அள்ளி வழங்கினால் அது செய்தி அல்ல. தம்மிடம் இருக்கும் இரண்டு ரொட்டித்துண்டில் ஒன்றை தம்மைப்போல் பசியோடிருப்பவர்களுக்கு வழங்குவதே தானம். இருக்கும்போது தருவதைவிட இல்லாதபோது கொடுப்பது மகத்துவம் வாய்ந்தது.

Similar News