லைஃப்ஸ்டைல்

வீடுகளில் பாதுகாப்பிற்கு உதவும் பயோமெட்ரிக் கருவிகள்

Published On 2016-10-12 01:55 GMT   |   Update On 2016-10-12 01:55 GMT
பல பாதுகாப்பு கருவிகள் கேமரா, வீடியோ டோர் ஃபோன் போன்றவைகள் இருந்தாலும் பயோமெட்ரிக் கருவி மிகவும் துல்லியமாக ஒரு நபரை அடையாளம் காட்ட உதவுகிறது.
வீட்டில் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களில் கூட இன்றைக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. வீட்டில் தனியே இருக்கும் வயதானவர்கள், பெற்றோர் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருந்தால் அவர்கள் வீடு திரும்பும் வரையில் தனியாக இருக்கும் குழந்தைகள் என்று வீட்டின் பாதுகாப்பு அவசியமாகிறது.

வீட்டை பூட்டி வைத்திருந்தாலும் கேஸ், பால், தண்ணீர் என்று ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியாட்கள் வீட்டிற்குள் வந்து செல்ல வேண்டியிருப்பதும் தவிர்க்க முடியாததாகும். இதற்கு பல பாதுகாப்பு கருவிகள் கேமரா, வீடியோ டோர் ஃபோன் போன்றவைகள் இருந்தாலும் பயோமெட்ரிக் கருவி மிகவும் துல்லியமாக ஒரு நபரை அடையாளம் காட்ட உதவுகிறது.

ஒரு மனிதனின் உடலியல் ரீதியான தகவல்களை சேகரித்து வைத்து சரியான நபரை அடையாளம் காட்ட உதவுகிறது ‘பயோமெட்ரிக்ஸ்’ இதில் ஒரு மனிதரை அடையாளம் காட்ட முகம், கண்விழிகள், கைவிரல் அடையாளம் மற்றும் கையெழுத்து போன்றவற்றைக் கொண்டு செயல்படுகிறது.

இவற்றில் பொதுவாக முகம் மற்றும் கைவிரல் ரேகைகள் வீடுகளின் பாதுகாப்பிற்கான கருவிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த கருவியில் பொதுவாக ஒரு வீடியோ கேமரா இருக்கும். அது ஒருவரின் முகத்தை படம் பிடித்து அதை தகவலாக மாற்றி சேமித்து வைத்துக் கொள்ளும். பின்னர் அந்த நபரை அக்கருவியில் படம் பிடிக்கும் போது அவரைப்பற்றிய தகவல்கள் தெரியும். அந்த நபரை வீட்டிற்குள் அனுமதிக்கலாமா, கூடாதா என்பதை நாம் இதன் மூலம் நிர்ணயித்துக் கொள்ளலாம்.

சில பயோமெட்ரிக் கருவிகள் மேலும் சாதுர்யமாக இயங்கக் கூடியதாகவும் உள்ளன. ஒரு மனிதனின் நடை, நடவடிக்கை, குரல் போன்றவைகளைக்கூட படம்பிடித்து தகவலாக சேமித்து வைத்துக் கொள்கிறது. அதேநபர் சாதாரணமாக நடந்து வரும்போதே அவருடைய அடையாளத்தை சரியாக கணித்து அவரை அனுமதிக்கலாமா கூடாதா என்ற முடிவையும் எடுத்து விடுகிறது.

இதுவரை அலுவலகங்கள், பொது இடங்களில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட இந்த கருவிகள் இப்போது நுகர்வோர் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கருவி மூலம் நீங்களும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மட்டுமே உங்கள் வீட்டிற்குள் நுழைய முடியும். கைவிரல் ரேகையை படித்து பூட்டு திறந்து வீட்டிற்குள் அனுமதிக்கும் பயோமெட்ரிக் கருவி கதவுப்பிடியின் அளவில் கிடைக்கிறது. இதனால் சாவி இல்லை, சாவி தொலைந்தது போன்ற பிரச்சினைகளும் இல்லை.

Similar News