குழந்தை பராமரிப்பு

கோடை வெப்பத்தில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

Published On 2024-05-15 10:27 GMT   |   Update On 2024-05-15 10:27 GMT
  • குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது நல்லது.
  • குழந்தைகளுக்கு நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.

பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது பெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்புச் சத்தும் குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.

குழந்தைகளிடம் வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மண்பானை தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உடல்உஷ்ணத்தை தவிர்க்கலாம்.

உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம். வெயில் மதியம் 1 முதல் மாலை 4 மணிவரை அதிக பாதிப்பை தரும். இந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால், சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.

குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளையும் குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

Tags:    

Similar News