லைஃப்ஸ்டைல்

கூந்தலை மிருதுவாக்கும் ரோஜா இதழ்

Published On 2017-01-13 08:56 GMT   |   Update On 2017-01-13 09:28 GMT
ரோஜா இதழ்கள் உங்களுடைய தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. மேலும் ரோஜா இதழ்களை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
ரோஜாவில் வைட்டமின்கள் சி, டி மற்றும் பி3 அதிக அளவில் உள்ளது. இவை அனைத்தும் இரத்த ஓட்டத்தை தூண்டி புதிய முடி செல்கள் உருவாக ஊக்குவிக்கின்றது. எனவே ரோஜா இதழ்கள் உங்களுடைய தலைமுடிக்கு அளிக்கும் பலன்களை தவிர்க்க முடியாது.

தேங்காய் எண்ணெய் அரை கப் எடுத்து அதை சுமார் 2 நிமிடங்கள் வரை குறைந்த வெப்ப நிலையில் சூடாக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்த பின்னர் எண்ணெயை குளிர விடவும்.

அடுத்த படியாக தேங்காய் எண்ணெய் உடன் சுமார் 5 சொட்டு ரோஸ்மேரி எண்ணெயை சேருங்கள். இந்தக் கலவையை நன்கு கலக்கவும்.

ஒரு கை நிறைய ரோஜா இதழ்களை எடுத்து அதை சுமார் 24 மணி நேரம் சூரிய ஒளியில் காய விடுங்கள். ரோஜா இதழ்கள் அடர் பழுப்பு நிறத்திற்கு மாறிய பின்னர் அதை நன்றாக பொடித்து பொடியாக மாற்றி விடுங்கள். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள எண்ணெயுடன் நன்கு கலக்குங்கள்.

சீப்பு பயன்படுத்தி உங்கள் முடியில் உள்ள அனைத்து சிக்கல்களையும் நீக்கவும். மிகவும் கடினமாக சீப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். அவ்வாறு செய்வதால் உங்களுடைய முடி உடைந்து விடலாம். முடிந்த வரை மிகவும் மெதுவாக அழுத்தம் கொடுக்கவும்.

வெதுவெதுப்பான எண்ணெய் கலவையை எடுத்து உங்களுடைய முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலையில் மிகவும் கவனமாக தடவவும். உங்களுக்கு அதிக பலன் வேண்டுமெனில், உங்களுடைய முடியை பகுதியாகப் பிரித்து இந்த எண்ணெயை தடவவும். முதலில் உச்சந்தலையில் தடவி அதன் பின்னர் நுனி வரை முழுவதுமாக எண்ணெயை தடவவும்.

இந்தப் பூச்சை சுமார் 45 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். அதன் பின்னர் ஒரு லேசான ஷாம்பு கொண்டு சுத்தமாக தலைக்கு குளித்து விடுங்கள். தலைக்கு குளித்த பின்னர் தலைக்கு கண்டிஷனர் உபயோகியுங்கள்.

உங்கள் தலையில் உள்ள ஈரப்பதத்தை நீக்க ஒரு பருத்தி துண்டு வைத்து மிகவும் மெதுவாக தலை துவட்டுங்கள். உங்களுடைய தலைமுடி இயற்கையாகவே உலரட்டும். எந்த ஒரு முடி உலர்த்தியையும் பயன்படுத்த வேண்டாம்.

இதனை முதல் முறை உபயோகித்த பின்னர் உங்களுடைய தலை முடி மிகவும் மென்மையாக மாறி விட்டதை நீங்கள் உணர்வீர்கள். எனவே நல்ல பலனிற்கு வாரத்திற்கு ஒரு முறை இந்த தலை முடிப் பூச்சை உபயோகியுங்கள்.

Similar News