லைஃப்ஸ்டைல்

பனிக்காலத்தில் சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள்

Published On 2016-12-19 04:43 GMT   |   Update On 2016-12-19 04:43 GMT
பனிக்காலத்தில் சிலருக்கும் சருமம் வறட்சி அடைந்து மிகவும் மோசமாக இருக்கும். அவர்களுக்கு சிறந்த வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதைப் பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும். கைகளையும், கால்களையும் மற்றவர்களுக்குக் காட்டவே வெட்கமாக இருக்கும். இத்தகைய வறட்சியைப் போக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது கோல்டு கிரீம்களைப் பூசிக்கொள்வோம்.

ஆயினும், சருமம் வறட்சியடைந்து காணப்படுதல் என்பது ஒரு நோயல்ல. இது ஒருசில புறக் காரணிகளால் ஏற்படுவதாகும். இருப்பினும் சிலருக்கு சில நோயின் காரணங்களினாலும், பரம்பரைக் காரணிகளாலும் சரும வறட்சி ஏற்படுகிறது. இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை (dermatitis) ஏற்படுத்திவிடும்.

இத்தகைய வறண்ட சருமத்திட்டுக்கள், உடலில் எந்த இடங்களில் வேண்டுமானாலும் ஏற்படலாம். பொதுவாக இந்த வறட்சிகளானது கைகள் மற்றும் கால்களில் அதிகம் காணப்படும். சிலருக்கு முகத்தில் வாய், கன்னம் மற்றும் கண்களுக்கு அடியில் இந்தத் திட்டுக்கள் காணப்படும். ஆனால் பலருக்கு இந்த வறட்சி எதனால் ஏற்படுகிறது என்பது தெரியாது. ஆகவே அத்தகையவர்களுக்காக சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உலர்ந்த காற்றினால், முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். ஏனெனில் உலர்ந்த காற்றானது சருமத்திலுள்ள நீர்ச்சத்தை வெளியேற்றி சருமம் களையிழக்கச் செய்யும். அதுமட்டுமல்லாமல், சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.

அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும், சருமம் வறட்சியடைந்து விடுகிறது. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய்ப் பசையானது, சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவும். ஆனால் வெந்நீரில் நீண்ட நேரம் இருப்பதால், அது சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசையை முற்றிலும் வெளியேற்றி உலரச் செய்துவிடுகிறது.

தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் காரணமாகும். இது சருமத்தில் நீர்ச்சத்தைக் குறைத்துவிடுகிறது.

பலவகையான சோப்புக்களைப் பயன்படுத்துதலும், சரும வறட்சிக்குக் காரணமாகும். வெந்நீரைப் போலவே, இதுவும் சருமத்தைப் பாதுகாக்கும் எண்ணெய்ப் பசையை நீக்கிவிடுகிறது. கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுவதாலும், சருமம் மிகவும் வறண்டு போகும். சில நேரங்களில் சோப்புக்கள் சரும வெடிப்புகளையும், இரத்தக்கசிவுகளையும் ஏற்படுத்திவிடும். இதனால் சருமத்தொற்றும் ஏற்படலாம்.

ஆகவே காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் கலந்த சோப்புகள்/ஹேண்ட் வாஷ் மற்றும் கிளீன்ஸர்களையும் பயன்படுத்துவது நல்லது. மிக அதிகமாக சருமத்தை ஸ்க்ரப் செய்வதாலும், சருமம் வறண்டுவிடும். சருமத்தை இவை அதிகம் உராய்வதால், எண்ணெய்ப் பசை நீங்கி சருமம் வறண்டு விடுகிறது. எனவே ஸ்கரப் செய்யும் போது கைகளையோ அல்லது மெல்லிய ஸ்கரப்பர்களையோ பயன்படுத்த வேண்டும்.

Similar News