பொது மருத்துவம்

மாங்கொட்டையில் இவ்வளவு நன்மைகளா?

Published On 2022-06-18 08:43 GMT   |   Update On 2022-06-18 08:43 GMT
  • மாம்பழங்களை போலவே அவற்றின் கொட்டைகளும் ஆரோக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன.
  • மாங்கொட்டை தூள் இதய நோய் அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் தன்மை கொண்டது.

மாம்பழத்தை சாப்பிட்டதும் பெரும்பாலானோர் அதன் கொட்டையை குப்பைத்தொட்டியில் வீசி விடுகிறார்கள். சிலர் மண்ணில் புதைத்து மரமாக வளர்க்க முயற்சிப்பார்கள். மாம்பழங்களை போலவே அவற்றின் கொட்டைகளும் ஆரோக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. அவற்றுள் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் இருக்கின்றன.

மாங்கொட்டைகளில் செரிமானத்தை அதிகரிக்கும் பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளன. செரிமானக்கோளாறு, அசிடிட்டி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் மாங்கொட்டை பருப்பை வெயிலில் உலர்த்தி, தூளாக்கி உட்கொள்ளலாம். அதில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் செரிமானத் திறனை மேம்படுத்தக்கூடியவை. அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.

உலரவைக்கப்பட்ட மாங்கொட்டை பருப்புத் தூளை உட்கொண்டு வந்தால் உடலில் கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இந்த தூள் மோசமான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கக்கூடியது. உடலில் நல்ல கொழுப்பின் அளவை தானாகவே அதிகரிக்கவும் வைத்துவிடும். இது தவிர ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் ஒழுங்குப்படுத்தவும் துணைபுரியும்.

இந்த தூளை ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும். வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அளவு தூளை கலந்தும் பருகலாம். சுவைக்காக சிறிது தேனையும் சேர்த்துக்கொள்ளலாம். அதுபோல் எலுமிச்சை சாறுடனும் இந்த தூளை கலந்து பருகலாம். மாங்கொட்டை தூள் இதய நோய் அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் தன்மை கொண்டது.

மாங்கொட்டை பருப்பு தூளில் இருக்கும் வைட்டமின் சி, ஸ்கர்வி நோயை கட்டுப்படுத்தக்கூடியது. இரு பங்கு வெல்லம், 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு பங்கு மா விதைத்தூளை கலந்து சாப்பிட்டு வருவது உடல் நலனை மேம்படுத்தும்.

Tags:    

Similar News