லைஃப்ஸ்டைல்

எந்த உணவுகளை சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?

Published On 2017-03-21 08:18 GMT   |   Update On 2017-03-21 08:18 GMT
ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும் என்பதற்கான விளக்கத்தை விரிவாக பார்க்கலாம்.
புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப்போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும்.

மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப்போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற சமையலறையில் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும். இப்பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப்போகும்.

மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள் தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும்.



கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். வெயிலில் காயவைப்பதால் பூஞ்சைகள் மறைந்து விடாது.

அவற்றை உடனடியாக கொட்டி விடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும் போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங்களுக்கும் இதே கதி தான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.

ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீங்களே செய்து கொடுங்கள். கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பல முறை யோசியுங்கள். மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது, சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள்.

Similar News