லைஃப்ஸ்டைல்

ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்

Published On 2017-03-06 06:52 GMT   |   Update On 2017-03-06 06:52 GMT
மழை, குளிர் காலங்களில் ‘சிட்ரஸ்’ வகைப் பழங்களை, குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தைத் தவிர்ப்பது சிலரின் வழக்கம். ஆனால் ஆரஞ்சு பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
மழை, குளிர் காலங்களில் ‘சிட்ரஸ்’ வகைப் பழங்களை, குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தைத் தவிர்ப்பது சிலரின் வழக்கம். அதைச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பார்கள். ஆனால் ஏற்கனவே ஜலதோஷம், நெஞ்சுச் சளி இருந்தால் மட்டுமே ஆரஞ்சு சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். மற்றபடி, ஆரஞ்சுப் பழத்தை தாராளமாய்ச் சாப்பிடலாம்.

ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதன் அவசியம் என்ன? இதோ...

ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ‘ஹெர்ஸ்பெரிடின்’ என்ற வேதிப்பொருள், இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே தொடர்ந்து ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.

ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் அதிக மெக்னீசியம், ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். மேலும், சோடியம் அளவைக் குறைத்து அதிக ரத்த அழுத்தத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வரும்.

ஆரஞ்சில் உள்ள பிளேவனாய்டு, காயங்களையும், உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளையும் சரிசெய்யும். புதிதாய் காயங்கள் ஏற்பட்டாலும் விரைவில் குணமாகும்.



நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் சி சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட். வெள்ளை அணுக்கள் உற்பத்தியையும் பெருக்கும்.

அல்சரினால் குடலில் உண்டாகும் பாதிப்பை ஆரஞ்சு குணப்படுத்துகிறது. செரிமான சக்தியை அதிகரிக்கும்.

தொடர்ந்து ஆரஞ்சுப் பழச்சாறு பருகும்போது, சிறுநீரகக் கற்கள் உருவாவது தடுக்கப்படும். கடினமான உப்புக்களால் உருவாக்கப்படும் இந்தக் கற்களை ஆரஞ்சின் அமிலப் பண்பு கரைத்துவிடும்.

புற்றுநோய்க்குக் காரணமான பிரீ ரேடிகல்ஸை அழித்துவிடும். முக்கியமாக குடல், நுரையீரல், வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும்.

ஆரஞ்சில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட், ஆரோக்கியமான சருமத்துக்கு உதவும். இளமையான சருமத்தைப் பெறவும், முதுமையை தள்ளிப் போடவும் உதவும்.

உடல் எடையை குறையச் செய்யும். அதிக நார்ச்சத்து கொண்ட இந்தப் பழச்சாறு, கொழுப்பைக் கரைக்கிறது.

ஆரஞ்சுப் பழம், ரத்த சோகையைக் குணப்படுத்தும். ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். உடலில் இரும்புச் சத்தை கிரகித்துக்கொள்ள வைட்டமின் சி தேவை. ஆரஞ்சுப் பழத்தில் இது உள்ளது.

Similar News