உடற்பயிற்சி

உடலை சமநிலைப்படுத்த உதவும் யோகாசனங்கள்

Published On 2023-05-14 04:58 GMT   |   Update On 2023-05-14 04:58 GMT
  • பலவகையான உடல் உபாதைகளை தினமும் எதிர்கொள்கிறோம்.
  • யோகா செய்வதன் மூலம் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்று பார்ப்போம்.

அன்றாட வாழ்வில், தேவைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறோம். வேலைப்பளுவின் காரணமாக நமது உடல்நலத்தை கவனித்துக்கொள்ள மறந்து விடுகிறோம். இதனால் பலவகையான உடல் உபாதைகளை தினமும் எதிர்கொள்கிறோம். சில யோகா ஆசனங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்று பார்ப்போம்.

உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தாசனம்: இந்த ஆசனம் செய்யும் முன்பு, உடலைத் தளர்வாக வைத்துக்கொள்ள சில ஸ்டிரெச்சிங் பயிற்சிகளை செய்வது நல்லது. விரிப்பில் நேராக நின்று, கைகள் இரண்டையும் இடுப்புப் பகுதியில் கைகளின் பெருவிரல் முதுகுத்தண்டை பற்றியவாறு இருக்கும்படி வைக்க வேண்டும். இப்போது வலது காலின் விரல்கள் தரையில் பதியும்படி வைத்து, மெதுவாக இடது முழங்காலை மடக்காமல், இடது காலை நேராக நீட்டவும். இந்த நிலையில் இடது கையால், இடது காலின் விரல்களைத் தொடும்படி நேராக நிற்க வேண்டும். இப்போது நம் உடலின் சமநிலையை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

பின் இடுப்புப் பகுதி வரை காலை நேராகத் தூக்க வேண்டும். சில வினாடிகள் இந்த நிலையில் இருந்து, பின்னர் மெதுவாக இடது காலை, இடது பக்கவாட்டில் கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் சில நொடிகள் இருந்து விட்டு பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரலாம். இதேபோல் வலது காலுக்கும் செய்ய வேண்டும். இவ்வாறு இடது, வலது சுழற்சி முறையில் தொடர்ந்து 5 முறை இப்பயிற்சியைச் செய்யலாம்.

பலன்கள்: கை, கால் பகுதிகளில் ஏற்படும் தசைப் பிடிப்பை நீக்கும். இடுப்புப் பகுதிக்குக் கீழ் சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கும்.

அதோ முக ஸ்வனாசனம் : விரிப்பில் குப்புறப் படுக்கவும். இப்போது மார்புப் பகுதியின் பக்கவாட்டில் கைகளை ஊன்றி, கால்களைத் தரையில் பதித்து, இடுப்புப் பகுதியை மேல்நோக்கி உயர்த்த வேண்டும். மூச்சினை நன்றாக இழுத்து வெளியிட்டபடியே, இடது காலை மட்டும் தரையில் இருந்து முடிந்தவரை மேல்நோக்கி உயர்த்தவும். இந்த நிலையில் இடது முழங்கால் மடங்காது இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் சில நொடிகள் இருந்து விட்டு, பழைய நிலைக்குத் திரும்பலாம். இதேபோல் வலது காலுக்கும் செய்ய வேண்டும். இவ்வாறு இந்தப் பயிற்சியை தொடர்ந்து 3 முறை செய்யலாம்.

பலன்கள்: முழு உடலையும் தளர்வாக வைத்துக்கொள்ள இந்த ஆசனம் உதவும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Tags:    

Similar News