லைஃப்ஸ்டைல்
குழந்தைகளை வயதிற்கு ஏற்ப எப்படி அணுக வேண்டும்

குழந்தைகளை வயதிற்கு ஏற்ப எப்படி அணுக வேண்டும்

Published On 2019-11-15 03:45 GMT   |   Update On 2019-11-15 03:45 GMT
குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளை கண்டிக்காமல் இருப்பதும். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற் போல எப்படி அணுக வேண்டும் என்று பார்க்கலாம்.
குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் கோபப்பட்டு கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாங்கள் தான் குழந்தைகளை அடிக்கவில்லையே காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கும் விதமாக, குழந்தைகளை மிரட்டுவதற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக என்று எப்படி சமாதானம் சொன்னாலும் பாதிப்பு என்பது உண்மை தான். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற் போல எப்படி அணுக வேண்டும் என்பதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.

ஒரு வயதில் குழந்தைகளுக்கு அரவணைப்பு மிகவும் அவசியம். விளையாட்டாகவோ அல்லது உங்களை அறியாமலோ குழந்தையிடம் மிரட்டும் தொனியில் கத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அந்த அதிர்வை குழந்தைகளால் ஏற்றுக் கொள்வது சிரமம் என்பதால் தூக்கத்தில் அதிர்ந்து எழுந்து அழும், இதனால் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க மெலிதாக அவர்களை அணுகுவதே சிறந்தது. அதற்கு விரைவாக நல்ல முன்னேற்றம் கிடைப்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.

மூன்று வயதிற்க்குட்ப்பட்டது ஓடியாடும் வயது. பெரும்பாலும் அவர்கள் பின்னால் ஓட முடியாமல், அவர்களை தடுக்க முடியாமல் பெற்றோர் கத்துவர், அது அவர்களை நல்வழிப்படுத்த என்று நீங்கள் சமாதானம் சொல்லிக் கொண்டால் தயவு செய்து அதிலிருந்து வெளியே வாருங்கள். குழந்தைகளிடத்தில் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

ஐந்து வயதிற்க்குட்ப்பட்ட குழந்தைகள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடும். தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர் குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன் எண்ணத்தை வெளிப்படுத்தாது தனிமைபடுத்திக் கொள்ள அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடும்.

கோபத்தை அன்பால் அணுகுங்கள், ஓடி வந்து எதையாவது சிந்திவிட்டால், ஏன் ஓடி வந்தாய்? என்று கத்தி இனிமே வந்த கால ஒடச்சுருவேன் என்று மிரட்டாமல், கொட்டிருச்சு வாங்க க்ளீன் பண்ணலாம் என்று அழைத்து நீங்கள் சுத்தம் செய்யும் போது உடன் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இரட்டிப்பு வேலை என்று நினைப்பதை குழந்தையிடம் பக்குவமாக உணர்த்துங்கள். மெதுவா வந்தா கொட்டியிருக்காதுல்ல இனிமே வீட்டுக்குள்ள ஓடிவரக்கூடாது என்று புரியவைத்திடுங்கள்.

குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதோ அல்லது அவர்களை கண்டிக்காமல் இருப்பதோ தவறு. சிறு வயதில் அதிக செல்லத்துடன் அவர்களை அணுகினால் வளர்ந்த பின்பும், தவறுகள் செய்யும் போதும் அதே செல்லத்துடன் தன்னை அணுக வேண்டும் என்று விரும்புவர் அது பொய்க்கும் போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் அன்பாக திருத்துங்கள்.கடிந்து, கத்தாமல் அரவணைத்து தவறை உணர்த்துங்கள்

Tags:    

Similar News