வழிபாடு

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

Published On 2022-08-06 05:01 GMT   |   Update On 2022-08-06 05:01 GMT
  • நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெப்பல் உற்சவம் நடக்கிறது.
  • 9-ந்தேதி விடையாற்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.

கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிமாதம் தோறும் செடல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான செடல் உற்சவம் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, இரவில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

பூதவாகனம்,ரிஷபம், யானை உள்ளிட்ட வெவ்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

விழாவில், சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னர், ஐந்து கிணற்று மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, பக்தர்கள் செடல் குத்தி, தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் அம்மன் வீதி உலா நடந்தது. முன்னதாக நேற்று பக்தர்களின் வருகை அதிகம் காணப்பட்டதால், முதுநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடலூர்- சிதம்பரம் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது.

விழாவில், இன்று(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு புஷ்பபல்லக்கில் சாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) தெப்பல் உற்சவம், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) மஞ்சள் நீர் உற்சவமும், 9-ந்தேதி விடையாற்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News