வழிபாடு

புஜங்க சயனத்தில் வீற்றிருக்கும் அப்பால ரங்கநாதர்

Published On 2022-07-09 08:22 GMT   |   Update On 2022-07-09 08:22 GMT
  • பெருமாளின் தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது.
  • இங்கு பெருமாள் மேற்கு நோக்கியபடி, புஜங்க சயனத்தில் வீற்றிருக்கிறார்.

108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், பஞ்ச அரங்க தலங்களில் 'அப்பாலரங்கம்' என்ற பெயரோடும் அழைக்கப்படும் ஆலயம் இது. திருப்பேர்நகர் என்ற கோவிலடியில், இந்த அப்பால ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் இருக்கிறது. திருச்சி அருகே உள்ள லால்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

பெருமாளின் தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது. இக்குடத்திற்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு அதன்மேல் தட்டில் வைத்து அப்பம் நிவேதனம் செய்யப்படுவது தற்போதைய வழக்கமாக உள்ளது. மேலும் இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தனது ஒரு கரத்தால் மார்க்கண்டேயருக்கு ஆசி கூறுகிறார்.

உபமன்யுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால், இத்தல இறைவனுக்கு அப்பக்குடத்தான் (அப்பால ரங்கநாதர்) என்று பெயர். இங்கு பெருமாள் மேற்கு நோக்கியபடி, புஜங்க சயனத்தில் வீற்றிருக்கிறார். இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் பெருமாள் அருள்புரிந்த தலம் இதுவாகும்.

Tags:    

Similar News