வழிபாடு
திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் கல்வாழை பரிகாரம் செய்ய வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

வழிபாட்டுத்தலங்கள் மூடல் எதிரொலி: திருப்பைஞ்சீலி கோவிலில் கல்வாழை பரிகாரம் செய்ய வந்த பக்தர்கள்

Published On 2022-01-07 04:53 GMT   |   Update On 2022-01-07 04:53 GMT
வாரத்தில் 3 நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் மூடல் எதிரொலியாக மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் கல்வாழை பரிகாரம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்காரணமாக சுவாமியை தரிசனம் செய்யும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் நேற்று பக்தர்கள் பெருமளவு குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் எமனுக்கு என்று தனிசன்னதி உள்ளது. மேலும், திருமணமாகாதவர்களுக்கு இக்கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவும், பல்வேறு காரணங்களுக்காகவும் இக்கோவிலில் பரிகாரம் செய்வதற்கும், எமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக 3 நாட்கள் கோவில்கள் நடை சாத்தப்படும் என்பதால் நீலிவனநாதர் கோவிலில் பரிகாரம் செய்வதற்காகவும், எமனை தரிசனம் செய்வதற்காகவும் நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கார் மற்றும் வேன்களில் கோவிலில் குவிந்து பரிகாரம் செய்து சாமியை வழிபட்டு சென்றனர்.

கோவில்களில் 3 நாட்கள் பக்தர்கள் தடை எதிரொலியால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் நுழைவு வாயில்களான தெற்குவாசல், கிழக்கு வாசல், வடக்குவாசல் பகுதிகளில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு அதில் தமிழ்நாடு அரசு, கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நிலையான வழிகாட்டு ஆணைப்படி கொரோனா நோய் தொற்று பரவலில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று அகிலாண்டேஸ்வரி கோவில் நுழைவு வாயில்களிலும் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News