ஆன்மிகம்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை திருவிழா

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் அடுத்த ஆண்டு பிப்.17-ந்தேதி பொங்காலை திருவிழா

Published On 2021-08-13 05:52 GMT   |   Update On 2021-08-13 05:52 GMT
10 நாட்கள் நடைபெறும் பொங்காலை திருவிழாவில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பொங்கலிடுவார்கள்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்காலை திருவிழா உலக புகழ்பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் பொங்காலை திருவிழாவில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பொங்கலிடுவார்கள்.

இந்த பொங்காலை திருவிழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டது 2 முறை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த பொங்காலை விழாவில் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் கோவில் பூசாரிகள் மட்டுமே பொங்கலிட்டனர்.

இந்த நிலையில் வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்காலை திருவிழா தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொங்காலை விழா தொடங்கும் நேரம் குறித்து கோவில் தந்திரிகள் முடிவு செய்து கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

அதன்படி பிப்ரவரி 9-ந் தேதி காலை 10 மணிக்கு தேவியை காப்புகட்டி குடியிருத்தும் சடங்குடன் திருவிழா தொடங்குகிறது. 3-ம் திருவிழாவில் குத்தியோட்டி நடைபெறுகிறது. 17-ந் தேதி 9-ம் திருவிழாவில் காலை 10.50 மணிக்கு பொங்காலை நடைபெறும். அன்று காலை பொங்கலிட பெண்கள் மற்றும் குழந்தைகள் பொங்கலிட லட்சக்கணக்கானோர் கூடுவார்கள்.

18-ந் தேதி இரவு 9.30 மணிக்கு பகவதி அம்மனின் காப்பு அவிழ்த்து குறுதி தர்பணம் பூஜைகளுடன் விழா நிறைவடையும். கொரோனா பரவல் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனுமதிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News