search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்"

    • ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும்.
    • லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்காலை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

    இந்த ஆண்டுக்கான பொங்காலை திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா தொடங்கிய நாள் முதல் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

     முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு இன்று பகல் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதலே ஏராளமான பெண்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் பொங்கலிட வசதியாக ஏராளமான மண்பானைகள் கோவில் அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தது. அதனை பெண்கள் போட்டி போட்டு வாங்கினர்.

    இதேபோல் பொங்கலிடும் இடத்தை பிடிப்பதற்கும் போட்டி இருந்தது. இரவிலேயே இடம் பிடித்து அங்கேயே பெண்கள் படுத்து தூங்கினர். இன்று காலை கோவில் நடை திறந்ததும் அவர்கள் வழிபாடு செய்து பொங்கலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். காலை 10.30 மணிக்கு கோவில் பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது.

    தொடர்ந்து பெண்கள், கோவில் வளாகத்தில் தொடங்கி பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பொங்கல் வைத்தனர். திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகளிலும் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான பெண்கள் இதில் ஈடுபட்டனர். இதனால் திருவனந்தபுரம் மற்றும் ஆற்றுக்கால் பகுதிகளில் புகை மண்டலமாகவே காட்சி அளித்தது. திரும்பிய இடமெல்லாம் பக்தர்கள் கூட்டமே காணப்பட்டது.

    • ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்றது.
    • ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழா, உலக பிரசித்திப் பெற்றதாகும்.

    மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர், 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக கூறப்படும் இடம், இன்றைய கேரளா. `கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில், ஏராளமான பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயர் எதுவும் கிடையாது. அந்த அம்மன்கள் அனைவரும் அந்தந்த ஊர் பெயருடன் இணைத்து பகவதி என்றே அறியப்படுகின்றனர்.

    கேரளாவில் உள்ள ஒவ்வொரு பகவதி அம்மன் கோவில்களுக்கும் தனிச் சிறப்பு இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் என்னும் இடத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

    கோவில் மட்டுமின்றி, அங்கு வீற்றிருந்து அருளும் ஆற்றுக்கால் பகவதி அம்மனும் தன்னுடைய அருள் சக்திக்கு சிறப்பு பெற்றவராக திகழ்கிறார்.

    இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா, உலக பிரசித்திப் பெற்றதாகும். இந்த நிகழ்வில் பல லட்சம் பக்தர்கள், அதுவும் பெண்கள் மட்டுமே திரண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவது தனிச் சிறப்புக்குரியது.

     கோவில் வரலாறு

    சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகியின் அவதாரம்தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் இல்லை என்பதை நிரூபித்த கண்ணகி, மதுரையை தீக்கு இரையாக்கினாள். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்குச் செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டதாம்.

    பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய ஒரு சிறுமி வந்தாள். அந்த பக்தர், சிறுமியை அன்னையின் அம்சமாகவே பார்த்தார். பக்தர் அருகில் வந்த சிறுமி, "ஐயா.. என்னை இந்த ஆற்றின் மறுகரையில் கொண்டு போய் விட முடியுமா?" என்று கேட்டாள்.

    ஆனால் அந்தச் சிறுமியை விட்டுப் பிரிய மனம் இல்லாத பக்தர், அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, விருந்தளித்து உபசரிக்க எண்ணினார். அதை அந்த சிறுமியிடம் சொல்ல நினைக்கும் போதே, அந்தச் சிறுமி மறைந்து போனாள். வந்தது அம்மன்தான் என்பதை, அந்த பக்தர் உறுதிசெய்தார்.

    அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, "தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள்" என்று கூறினாள். மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்குச் சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார்.

    பின்னர் அந்த இடத்தில் ஒரு சிறிய கோவிலை கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்தக் கோவிலே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியடைந்தது என்கிறது இன்னொரு கோவில் வரலாறு.

    பொங்கல் திருவிழா

    இந்த ஆலயத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்தத் திருவிழா, 10-ம் நாள் குருதி தர்ப்பண விழாவுடன் நிறைவு பெறும். முதல் நாள் விழாவில் கண்ணகி கதையை பாடலாகப் பாடி, பகவதி அம்மனை குடியிருத்துவர். கொடுங்கல்லூர் பகவதியை ஆவாகனம் செய்து (அழைத்து வந்து) இந்த பத்து நாட்களும் இங்கே குடியிருக்கச் செய்தவதாக ஐதீகம்.

    மாசித் திருவிழாவின் 9-ம் நாள் விழாவாக பொங்கல் வைக்கப்படும். மதுரையை தீக்கிரையாக்கி வந்த கண்ணகி தேவியை, மன அமைதி கொள்ளச் செய்வதற்காக, பெண்கள் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்வதாக இதற்கு காரணம் சொல்லப்படுகிறது.

    மகிஷாசுர வதம் முடிந்து பக்தர்கள் முன் தோன்றிய தேவியை, பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து நைவேத்தியம் படைத்து வரவேற்றனர் என்ற மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வை மையப்படுத்திதான், மாசித் திருவிழாவின்போது, பொங்கல் வைக்கும் வைபவம் நடத்தப்படுகிறது.

    பொங்கல் திருவிழா அன்று, கோவிலின் முன் பக்கம் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் அமர்ந்து கண்ணகி வரலாற்றில் பாண்டியன் தன் தவறை உணர்ந்து மரணிக்கும் பாடல் பாடப்படும். அது முடிந்ததும் கோவில் தந்திரி கருவறையில் இருந்து தீபம் ஏற்றி வந்து, மேல் சாந்தியிடம் (தலைமை பூசாரி) வழங்குவார். அவர் கோவில் திடப்பள்ளியில் உள்ள பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார்.

    பின்னர் அந்த தீச்சுடரை சக பூசாரியிடம் வழங்குவார். அவர் கோவிலின் முன்பு உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டுவார். அதைத் தொடர்ந்து மற்ற அனைத்து பொங்கல் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும். இதற்கான அறிவிப்பாக செண்டை மேளமும், வெடி முழக்கமும், வாய் குரவையும் ஒலிக்கப்படும்.

    ஏனெனில் கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில், அதாவது திருவனந்தபுரம் நகரின் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், சின்னசின்ன தெருக்கள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தபடி பெண்கள் பொங்கல் வைப்பார்கள். ஒரு ஊரில் ஒரே நேரத்தில் பல லட்சம் பெண்கள் பொங்கல் வைக்கும் சம்பவம் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. (இந்த பொங்கல் வைக்கும் வைபவம், கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

    முதன் முறையாக 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்தது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்தது. பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் இந்த சாதனை 30 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்ததாக பதிவானது.)

    பொங்கல் வைக்கும் நிகழ்வு முடிந்ததும், பிற்பகலில் குறிப்பிட்ட வேளையில் கோவிலில் இருந்து நியமனம் செய்யப்பட்ட பூசாரிகள், புனித நீர் தெளித்து பொங்கல் நைவேத்தியம் செய்வார்கள். அப்போது வானத்தில் இருந்து விமானம் மூலமாக மலர் தூவப்படும்.

    அன்றைய தினம் இரவு ஆற்றுக்கால் பகவதி அம்மன், மணக்காடு என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருள்வார். அம்மன் ஊர்வலம் செல்லும் வீதி அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் குத்துவிளக்கேற்றி அம்மனை வரவேற்பார்கள். மறுதினம் அதிகாலை சாஸ்தா கோவிலில் பூஜை முடிந்ததும், அங்கிருந்து ஆற்றுக்கால் பகவதி அம்மன் தன் இரும்பிடம் திரும்புவார்.

    ஆலய அமைப்பு

    இந்த ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ-பார்வதி ஆகியோரின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசலின் மேல் பகுதியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன், தன் நான்கு கரங்களில் கத்தி, கேடயம், சூலம், அட்சய பாத்திரம் தாங்கியும், அரக்கி ஒருத்தியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்திலும் அருள்பாலிக்கும் சுதைச் சிற்பம் உள்ளது.

    கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்ரகத்தின் கீழே அபிஷேக விக்ரகம் உள்ளது. அம்மனின் கருவறை 'ஸ்ரீகோவில்' என்று அழைக்கப் படுகிறது.

    வளாகத்தைச் சுற்றிலும் கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்ச நேயர் சன்னிதிகள் உள்ளன. இந்த ஆலயம் தினமும் காலை 4.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

     குத்தியோட்டம்

    இந்தத் திருவிழாவில் சிறுவர்களுக்காகவும் ஒரு வழிபாடு உள்ளது. இதனை 'குத்தியோட்டம்' என்கிறார்கள். 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்கலாம். அவர்கள் அனைவரும் மகிஷாசுரமர்த்தியின் காயமடைந்த போர்வீரர்களாக கருதப்படுகிறார்கள்.

    மாசித் திருவிழா தொடங்கிய மூன்றாவது நாள், இந்த வழிபாட்டை செய்யும் சிறுவர்கள் தலைமை பூசாரியிடம் வந்து பிரசாதம் பெற்று, கோவிலின் தனி இடத்தில் 7 தினங்கள் தங்கி இருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள்.

    தினமும் நீராடி அம்மன் சன்னிதியில் ஈர உடையுடனேயே 7 நாட்களில் அம்மனின் 1008 திருநாமங்களை சொல்லி முடிக்க வேண்டும். பொங்கல் வைக்கும் நாள் அன்று, சிறுவர்களின் விலா எலும்புகளின் கீழ் பகுதியில் முருகனுக்கு அலகு குத்துவது போல் உலோகக் கம்பி கொக்கியால் குத்துவார்கள்.

    பொங்கல் வைத்து முடித்ததும், இந்த சிறுவர்கள் யானை மீது ஊர்வலமாக எழுந்தருளும் அம்மனின் முன்பாக அணிவகுத்துச் செல்வார்கள். மறுநாள் காலையில் சிறுவர்களின் உடலில் குத்தப்பட்டிருந்த கம்பிகள் அகற்றப்பட்டு விரதம் நிறைவுபெறும். இவ்வாறு செய்வதால், சிறுவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.

     

    தாலிப்பொலி

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெறும் நாள் அன்று காலையில், 'தாலிப்பொலி' என்ற நிகழ்ச்சி நடைபெறும். சிறுமிகள் பலரும் தங்களை அலங்கரித்துக் கொண்டு அம்மன் சன்னிதியை நோக்கி குடும்பத்துடன் வந்து அம்மனை பூஜித்து திரும்புவார்கள். இதில் பங்கேற்கும் அனைத்து சிறுமிகளும் புத்தாடை அணிந்து, தலையில் மலர் கிரீடம் சூடி, கையில் தாம்பாளம் ஏந்தி, அதில் அம்மனை வழிபடுவதற்கான பூஜை பொருட்கள் வைத்து, சிறு தீபம் ஏற்றிக் கொண்டு வருவார்கள். இவ்வாறு செய்வதால், சிறுமிகளுக்கு நோய், நொடிகள் வராது. அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    அமைவிடம்

    திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை சிட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆற்றுக்கால் திருத்தலம்.

    • பொங்கலிட்ட பெண் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • தெருக்கள் மட்டுமின்றி சாலையோரமும் பெண்கள் பொங்கலிட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது.

    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்காலை விழா இன்று நடந்தது.

    இதற்காக திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள பண்டார அடுப்பில் காலை 10.30 மணிக்கு கோவில் பூசாரி தீ மூட்டி பொங்காலை விழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து திருவனந்தபுரம் நகர் முழுக்க பெண்கள் அடுப்பு மூட்டி பொங்கலிட்டனர்.

    திருவனந்தபுரம் முழுக்க பொங்கலிட்ட பெண் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதுபோல மலர்களும் தூவப்பட்டது.

    இன்று மதியம் 2.30 மணிக்கு பொங்கல் நைவேத்தியம் வழங்கப்படுகிறது.அதன்பிறகு தொடர்ந்து விழா நடைபெறுகிறது.

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் முழுக்க பெண்கள் அடுப்பு மூட்டி பொங்கலிட்டதால் எங்கும் புகை மூட்டமாக காணப்பட்டது.

    மேலும் தெருக்கள் மட்டுமின்றி சாலையோரமும் பெண்கள் பொங்கலிட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது.

    • லட்சக்கணக்கான பெண்கள் இந்த பொங்கலை வழிபாட்டில் பங்கேற்கிறார்கள்.
    • 8-ந்தேதி யானை மீது அம்மனை வைத்து ஊர்வலம் நடைபெறும்.

    கேரளாவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுவது, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்காலை விழா உலகப் பிரசித்தி பெற்றது ஆகும்.

    இந்த விழாவின் போது உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். லட்சக்கணக்கான பெண்கள் இந்த பொங்கலை வழிபாட்டில் பங்கேற்பது வழக்கம்.

    கடந்த 2009-ம் ஆண்டு இங்கு நடந்த பொங்காலை விழாவில் அதிக அளவிலான பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சிறப்பு வாய்ந்த இந்த பொங்காலை விழா இந்த ஆண்டு கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்காலை திருவிழா நாளை (7-ந் தேதி) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று பொங்கல் வைப்பதற்காக பெண் பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.

    நாளை அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. 10.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படுகிறது. அப்போது பெண்கள் குலவையிடுவார்கள்.

    செண்டை மேளம், வாண வேடிக்கை போன்றவையும் நிகழ்த்தப்படும். இதனை தொடர்ந்து கோவிலைச் சுற்றிலும் சுமார் 20 கி.மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

    அப்போது ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து பொங்கல் பானைகள் மீது பூக்கள் தூவப்படும். பிற்பகல் 2.30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பூசாரிகள் ஈடுபடுவார்கள்.

    வருகிற 8-ந்தேதி காலை 8 மணிக்கு யானை மீது அம்மனை வைத்து ஊர்வலம் நடைபெறும் தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு 1 மணிக்கு குருதி சமர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    பொங்காலை விழாவில் பங்கேற்க கேரளாவின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்தும் பெண் பக்தர்கள் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் குவிந்துள்ளனர். இதனால் திருவனந்தபுரம் நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    பொங்காலை வழிபாட்டில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது.
    • பிரசித்தி பெற்ற பொங்கல் விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்.

    இக்கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கானோர் பொங்கிலிட்டு வழிபடுவார்கள்.

    இதனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்கல் விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது.

    இக்கோவிலில் முதன்மை அர்ச்சகராக இருந்தவர் நாராயணன் நம்பூதிரி. இவர் ஆற்றுக்கால் கோவில் பரம்பரையை சேர்ந்தவர். இவரது மகன் சாந்தனு. நாகர்கோவிலில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. பட்டப்படிப்பு படித்த சாந்தனு, படிப்பு முடிந்த பின்னர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியில் சேர்ந்தார்.

    அதன்பின்பு வெளிநாட்டிலும் வேலை பார்த்தார். இந்தநிலையில் அவருக்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் பூசாரியாக வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

    இதையடுத்து அவர் சாப்ட்வேர் என்ஜினீயர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அர்ச்சகராக பணியில் சேர்ந்தார். இது பற்றி அவர் கூறியதாவது:-

    வருமானம் தரும் சாப்ட்வேர் என்ஜினீயராக இருந்தாலும் நான் குடும்பத்தைவிட்டு பிரிந்தே இருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் எனக்கு கோவில் அர்ச்சகராக வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

    இதுபற்றி தந்தையிடம் கூறியபோது அவர் என் மனதுக்கு பிடித்ததை செய்யும்படி அறிவுறுத்தினார். எனது மனைவியும் என் விருப்பத்துக்கு குறுக்கே நிற்கவில்லை. இதனால் நான் ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இது மனதுக்கு நிம்மதியாக உள்ளது, என்றார்.

    • 6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு குத்தியோட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • 8-ந் தேதி குருதி தர்ப்பணத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

    கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் பொங்கல் திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் செயற்குழு உறுப்பினர்கள் சந்தீப்குமார், நந்தகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் வருகிற 27-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெறும்.

    வரலாற்று சிறப்பு மிக்க பொங்கல் விழா அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான குத்தியோட்டம், தாலப்பொலி நிகழ்வுக்காக திருவிழாவின் 3-வது நாள் குழந்தைகள் விரதம் தொடங்குகின்றனர். முன்பு 6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு குத்தியோட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 10 வயது முதல் 12 வயது வரை உள்ள 743 சிறுவர்கள் குத்தியோட்டம் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

    8-ந் தேதி இரவு 9.15 மணிக்கு காப்பு அவிழ்த்து குடியிறக்கிய பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு நடக்கும் குருதி தர்ப்பணத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

    ஆற்றுக்கால் பொங்கல் விழா அன்று காலை 10.30 மணிக்கு பண்டார அடுப்பில் தீ மூட்டப்படுவதை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கலிடுவார்கள். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் விழா பெரிய அளவில் நடைபெறவில்லை. அவரவர் வீடுகளில் பக்தர்கள் பொங்கலிட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுவதால் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கலிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். திருவிழா தொடங்கும் அன்று மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளை சினிமா நடிகர் உண்ணி முகுந்தன் தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×