search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் வழிபாடு
    X

    மின்னொளியில் ஜொலிக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்.

    கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் வழிபாடு

    • லட்சக்கணக்கான பெண்கள் இந்த பொங்கலை வழிபாட்டில் பங்கேற்கிறார்கள்.
    • 8-ந்தேதி யானை மீது அம்மனை வைத்து ஊர்வலம் நடைபெறும்.

    கேரளாவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுவது, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்காலை விழா உலகப் பிரசித்தி பெற்றது ஆகும்.

    இந்த விழாவின் போது உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். லட்சக்கணக்கான பெண்கள் இந்த பொங்கலை வழிபாட்டில் பங்கேற்பது வழக்கம்.

    கடந்த 2009-ம் ஆண்டு இங்கு நடந்த பொங்காலை விழாவில் அதிக அளவிலான பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சிறப்பு வாய்ந்த இந்த பொங்காலை விழா இந்த ஆண்டு கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்காலை திருவிழா நாளை (7-ந் தேதி) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று பொங்கல் வைப்பதற்காக பெண் பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.

    நாளை அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. 10.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படுகிறது. அப்போது பெண்கள் குலவையிடுவார்கள்.

    செண்டை மேளம், வாண வேடிக்கை போன்றவையும் நிகழ்த்தப்படும். இதனை தொடர்ந்து கோவிலைச் சுற்றிலும் சுமார் 20 கி.மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

    அப்போது ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து பொங்கல் பானைகள் மீது பூக்கள் தூவப்படும். பிற்பகல் 2.30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பூசாரிகள் ஈடுபடுவார்கள்.

    வருகிற 8-ந்தேதி காலை 8 மணிக்கு யானை மீது அம்மனை வைத்து ஊர்வலம் நடைபெறும் தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு 1 மணிக்கு குருதி சமர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    பொங்காலை விழாவில் பங்கேற்க கேரளாவின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்தும் பெண் பக்தர்கள் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் குவிந்துள்ளனர். இதனால் திருவனந்தபுரம் நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    பொங்காலை வழிபாட்டில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×