ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி கொடை விழா கால் நாட்டுதலுடன் தொடங்கியது

Published On 2020-07-29 09:45 GMT   |   Update On 2020-07-29 09:45 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா கால்நாட்டுதலுடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடை விழா நேற்று கால்நாட்டுதலுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலையில் கோவில் வளாகத்தில், அலங்கரிக்கப்பட்ட கால் நாட்டப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் இரவில் முளைப்பாளிகை இடுதல் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் பரமானந்தம் மற்றும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு, கோவிலுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆடி கொடை விழாவை முன்னிட்டு, வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு தீபாராதனை நடைபெறும். சிகர நாளான 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆடி கொடை விழா நடக்கிறது. அன்று காலை 11 மணிக்கு கோவில் வளாகத்தில் கும்பம் புறப்படுதல், இரவு 10 மணிக்கு கோவில் வளாகத்தில் தீச்சட்டி புறப்படுதல் நடைபெறுகிறது. 5-ந்தேதி (புதன்கிழமை) காலையில் கோவில் வளாகத்தில் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. நிகழ்ச்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள், யூ-டியூப் சேனல்கள் மூலம் ஒளிபரப்பு செய்வதற்கு மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Tags:    

Similar News