ஆன்மிகம்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்த காட்சி.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு

Published On 2020-06-02 05:28 GMT   |   Update On 2020-06-02 05:28 GMT
கொரோனா நாட்டை விட்டு ஒழிய கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நெய்தீபம் ஏற்றி தளவாய்சுந்தரம் தலைமையில் வழிபாடு நடத்தப்பட்டது.
கொரோனா நோய் உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வருகிறது. இதை தடுக்க இந்தியாவிலும், தமிழகத்திலும் மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் இயங்கும் குமரி மாவட்ட கோவில் நிர்வாகம் சார்பில் கொரோனா நோய் நாட்டை விட்டு விலக வேண்டியும், உலக நன்மைக்காகவும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடல் அன்னைக்கு ஆரத்தி வழிபாடு மற்றும் சிறப்பு பூஜை நேற்று நடந்தது.

இதையொட்டி கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திருவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் சிறப்பு யாகம் நடந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து குடத்தில் எடுத்து வரப்பட்ட புனித நீரை வைத்து யாகம் நடத்தப்பட்டது. அப்போது, 6 கண்ணாடி கூண்டு விளக்குகளில் நெய்தீபம் ஏற்றி யாகம் நடந்தது. இந்த யாகத்தை சிவாச்சாரியார்கள் ராஜேஷ், கார்த்தி, பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி விட்டல் போற்றி ஆகியோர் நடத்தினர்.

யாகம் முடிந்த பிறகு கன்னியாகுமரி கடலில் மேற்கே சூரியன் மறையும் போது, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் குமரி மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கோவில் இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், அறங்காவலர் குழு உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் 6 நெய் தீபத்தை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து முக்கடல் சங்கமத்தில் இடுப்பளவு தண்ணீரில் தீபத்துடன் நின்றனர்.

இதையடுத்து சிவாச்சாரியார்கள் கடலில் மாபொடி, மஞ்சள், களபம், பால், தயிர், தேன், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 10 வாசனை திரவியங்களை ஊற்றி அபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து அனைவரும் கடலில் மலர்தூவி புஷ்பாபிஷேகம் செய்தனர். முக்கடலும் சங்கமிக்கும் இடத்தை நோக்கி 51 தீபங்கள் கொண்ட 5 அடுக்கு தீபம் மூலம் தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது, தளவாய்சுந்தரம் தலைமையில் கையில் நெய்தீபத்தை ஏந்தியவர்களும், கடல் அன்னைக்கு தீபாராதனை காட்டினர். இறுதியாக அனைவரும் கடலில் புனித நீராடினர்.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நையினார், தாணுமாலசாமி கோவில் மேலாளர் சண்முகம்பிள்ளை, கோவில்களின் முன்னாள் கண்காணிப்பாளர் சோணாச்சலம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீலபெருமாள், அறங்காவலர் குழு உறுப்பினர் பாக்கியலட்சுமி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவர் தம்பிதங்கம், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை தினேஷ், ஒன்றிய இலக்கிய அணி துணை செயலாளர் பகவதியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் சமூக இடைவெளி விட்டு நிழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News