கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக கோவில் செயல் அலுவலர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் பார்களை வருகிற 31-ந்தேதி வரை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 31-ந்தேதி வரை சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் அம்ரித் கூறுகையில், ‘திருச்செநதூர் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆனால், கோவிலில் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடக்கும்‘ என்றார்.