ஆன்மிகம்
திருவான்மியூர் மருந்தீஸ்வரர்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவபெருமானின் சிற்ப வடிவங்கள்

Published On 2020-02-27 09:03 GMT   |   Update On 2020-02-27 09:03 GMT
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத் தூண்களில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொரு சிற்பமும் ரசித்து, ரசித்துப்பார்க்கத்தக்கவை. அதில் சில சிற்பங்கள் விவரம் வருமாறு:
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத் தூண்களில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொரு சிற்பமும் ரசித்து, ரசித்துப்பார்க்கத்தக்கவை. அதில் சில சிற்பங்கள் விவரம் வருமாறு:

மான், மழு ஆகியவற்றை ஏந்தியவாறு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் சிவபெருமானின் திருவுருவங்கள் அம்மன் சன்னதி மண்டபங்களை அலங்கரிக்கின்றன.

ரிஷபாரூடர்

உமையன்னையுடன் ரிஷப வாகனத்தில் அமர்ந்துள்ள ஈசனின் வடிவங்கள், அம்மன் சந்நிதி மண்டபம், முருகன் சன்னதி வெளி மண்டபம் ஆகியவற்றில் தென்படுகின்றன.

அர்த்தநாரீஸ்வரர்

உமையன்னைக்கு தனது உடலில் இடதுபாகத்தை அளித்து மாதொரு பாகனாகக் காட்சி அளிக்கும் ஈசனின் வடிவம் அம்மன் சன்னதி வெளிமண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. உடுக்கையை ஒலிக்கும் நந்திகேஸ்வரரும் முனிவர்களும் பூதகணங்களும் அவரைச் சுற்றி இடம் பெற்றுள்ளனர்.

தட்சிணாமூர்த்தி

கல்லால் மரத்தின் அடியில் சனகாதி முனிவர்களுக்குக் குரு வடிவில் உபதேசம் செய்யும் தட்சிணாமூர்த்தி, அம்மன் சன்னதி வெளிமண்டபத்தில் காட்சி அளிக்கிறார்.

அம்பலவாணர்

முயலகனின் தலைமீது காலை இருத்தியவாறு நாட்டியமாடும் நடராஜரின் திவ்விய தரிசனத்தை அம்மன் சன்னதி வெளிமண்டபத்தில் காணலாம்.

சரபேஸ்வரர்

இரணியனை வதைத்த நரசிம்மர் உக்கிரம் மிகுந்து உலகை அச்சுறுத்தினார். தேவர்கள், முனிவர்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் சரபர் என்ற வடிவம் எடுத்து நரசிம்மரை ஒடுக்கினார். சரபரின் உருவமைப்பு பற்றி ஆகம சிற்ப நூல்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. கோவில்களிலும் தேர்களிலும் சரபேஸ்வரரின் சிற்பத்தை வடித்த சிற்பிகள் தங்களது கண்ணோட்டத்திற்கேற்ப வேறு பல மாறுதல்களைச் செய்துள்ளனர்.

திருவான்மியூர் அம்மன் சன்னதி வெளிமண்டபத்தூணில் மான், மழு ஏந்திய உருவம் நரசிம்மரைத் தனது மடியில் கிடத்தி அவரை வதைப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சரபேஸ்வரர் சிம்மமுகம், பறவைகளின் இறகுகள் ஆகியவற்றுடன் வடிக்கப்படுவது வழக்கம். திருவான்மியூரில் உள்ள தூண் சிற்பத்தில் சிவபெருமான் இரு பறவை முகங்களுடன் காட்சி அளிக்கிறார். எனவே, இது சரபேஸ்வரரின் வடிவம் அல்ல என்று கூறுபவரும் உண்டு.

லிங்கங்கள்

தியாகராஜர் மண்டபத் தூணில் ஒரு லிங்கத்தின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாகம் தனது படத்தை உயர்த்தி லிங்கத்திற்கு குடைபிடிக்கும் சிற்பம் மற்றொரு தூணில் இடம்பெற்றுள்ளது.

அம்மனின் திருவுருவங்கள்

நின்ற, அமர்ந்த கோலங்களில் உள்ள அம்மனின் திருவுருவங்களை அம்மன் சன்னதி தூண்களில் காணலாம். இரு கரங்களில் மலர் மொட்டுக்களை ஏந்தியவாறு தேவி தோன்றுகிறார். வெளிமண்டபத் தூணில் சிம்மத்தின் மீது தாண்டவமாடும் தேவியின் உருவம் உள்ளது. கையில் ஆயுதமேந்தியவாறு நடனமாடும் காளியின் தோற்றத்தை மற்றொரு தூணில் காணலாம்.
Tags:    

Similar News