ஆன்மிகம்
பழனி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடப்பட்டதையும், அங்கு கூடியிருந்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.

பழனி மாரியம்மன் கோவிலில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி

Published On 2020-02-27 06:05 GMT   |   Update On 2020-02-27 06:05 GMT
பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி கிழக்கு ரதவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில், லிங்க வடிவில் அம்மன் அருள் பாலிக்கிறார். பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு மாசித்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.

21 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. சாமி உத்தரவின்பேரில் கொடைக்கானல் சாலையில் உள்ள ஒரு தோப்பில் இருந்து நேற்று முன்தினம் கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டது.

பின்னர் பழனி வையாபுரிகுளத்துக்கு கம்பம் கொண்டு வரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 ரதவீதிகளில் கம்பம் சுற்றி வந்து நேற்று அதிகாலை கோவிலை வந்தடைந்தது. பின்பு 3.30 மணிக்கு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. அதன்பிறகு கம்பத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

மேலும் பால், மஞ்சள்நீரை ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில், அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி கொடியேற்றமும், பூவோடு வைத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 10-ந்தேதி இரவு 8.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி மாலை 4 மணி அளவில் நடக்கிறது. 12-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் கொடியிறக்குதலுடன் திருவிழா முடிவடைகிறது. திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் இரவு வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரி‌‌ஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News