ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் நடந்த லட்ச தீப விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.

மின்விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்த நெல்லையப்பர் கோவில்

Published On 2020-01-25 06:29 GMT   |   Update On 2020-01-25 06:29 GMT
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீப விழா கோலாகலமாக நடந்தது. மின்விளக்குகள் அலங்காரத்தில் கோவில் ஜொலித்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசையன்று பத்தாயிரம் தீபம் ஏற்றும் பத்திர தீப விழா நடைபெறும். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்ச தீபம் ஏற்றப்படும். 2014-ம் ஆண்டுக்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு ஒரு லட்சம் தீபம் ஏற்றும் லட்ச தீப விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழா கடந்த 13-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் வேணுவனநாதருக்கு (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்ரஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள், உற்சவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. கடந்த 17-ந்தேதி இரவு நெல்லையப்பர் கோவில் மணிமண்டபத்தில் ஒரு தங்க விளக்கிலும், 2 வெள்ளி விளக்கிலும் தீபம் ஏற்றப்பட்டது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான லட்ச தீபம் ஏற்றும் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி காலை 11 மணிக்கு பால்குட ஊர்வலம், 308 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, மதியம் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு மேளதாளம் முழங்க தங்க விளக்கு தீப ஒளியில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு, சுவாமி சன்னதி உள்பிரகாரம், வெளிப்பிரகாரம், அம்மன் சன்னதி உள்ளிட்டவற்றில் தீபம் ஏற்றப்பட்டது. கோவிலில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்பட்டன.

நந்தி சன்னதி முன்பு மாலை 6-30 மணிக்கு மேளதாளம் முழங்க நந்தி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடந்து நந்தி தீபத்துக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவில் முக்கிய அம்சமாக, சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் தீபம் ஏற்றப்பட்டதை போன்று புதிய பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெல்லையப்பர் கோவில் முன்பு கீழரதவீதியில் புதுமையான மின்விளக்குகள் ஏற்றப்பட்டன. இதில் 12 அடி உயர சுழலக்கூடிய கூம்பு வடிவ விளக்குகளும், 18 அடி உயர முக்கோண கூம்பு வடிவ விளக்குகளும், 8 அடி உயர ராட்டின சுழலும் விளக்குகளும், 4 அடியில் உள்ள சுற்றி வரக்கூடிய விளக்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 3 ஆயிரத்து 500 விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்தன. அந்த விளக்குகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. அவற்றை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பார்த்து வழிபட்டதும் தங்களது செல்போனிலும் படம் எடுத்துக் கொண்டனர். மேலும் அந்த விளக்குகளுடன் ஆர்வமாக ‘செல்பி‘யும் எடுத்தனர்.

லட்ச தீப விழாவையொட்டி நெல்லையப்பர் கோவில் கோபுரங்கள், விமானங்கள், கோவில் வளாகங்கள், தெப்பக்குளங்கள் உள்ளிட்டவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன. இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் பஞ்சமூர்த்திகளுடன் தங்க சப்பரத்திலும் வீதி உலா வந்தனர்.

விழாவில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார், உதவி கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

நெல்லையப்பர் கோவில் நின்ற சீர் நெடுமாறன் அரங்கத்தில் வாசுகி மனோகரனின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கினார். செங்கோல் ஆதினம், சரவணபிரியா அம்பா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் வாசுகி மனோகர், சைலப்பன் பிள்ளை உள்பட 3 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நெல்லை இந்து ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து செய்து இருந்தனர்.
Tags:    

Similar News