ஆன்மிகம்
அலங்காரத்தில் ஆனந்த விநாயகர், பழனி முருகன் கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம்.

புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

Published On 2020-01-02 04:51 GMT   |   Update On 2020-01-02 04:51 GMT
புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
ஆங்கில புத்தாண்டான நேற்று பழனி பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். பழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிய தொடங்கினர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். இதில் பாதயாத்திரையாக வந்தவர்களும் அடங்குவர். அதேபோல் கேரள பக்தர்களின் வருகையும் அதிகமாக இருந்தது.

பக்தர்கள் கூட்டத்தால் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மேலும் மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

இதேபோல் பழனி முருகன் கோவிலின் உபகோவில்களான திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவில் ஆகியவற்றிலும் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும் மலைக்கோவிலில் உள்ள ஆனந்தவிநாயகர் சன்னதியில் சுவாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் புத்தாண்டையொட்டி பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ்களில் பக்தர்கள் வந்ததால் அடிவாரம், குளத்துரோடு, கிரிவீதிகள், சன்னதிவீதி, பூங்காரோடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவ்வப்போது போக்குவரத்தை சீரமைத்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு தற்போதே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதால் பழனி அடிவாரம் பகுதியில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News