ஆன்மிகம்
ஆதிகுரு தத்தாத்ரேயரும் அவரின் அவதாரம் பாபாவும்

ஆதிகுரு தத்தாத்ரேயரும் அவரின் அவதாரம் பாபாவும்

Published On 2019-11-07 08:44 GMT   |   Update On 2019-11-07 08:44 GMT
உலகில் அவதரித்த சதாசிவபிரும்மேந்திரர், சாய்பாபா போன்ற பல மகான்கள் தத்தாத்ரேயரின் அவதாராமாக கருதப்படுகின்றனர்.
தத்தாத்ரேயர், பிரம்மன், திருமால், சிவன் மூவரையும் உள்ளடக்கிய கடவுள் ஆவார். இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர். இவரை திருமாலின் வடிவமாகக் கருதுகின்றனர்.

அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதனை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளது குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் யோசனை தெரிவித்தனர்.

அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான், அதை ஏற்போம், என்றனர். அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதா தன்மையின் மீதும் அதீத நம்பிக்கையுண்டு. “கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை உண்மையானால், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்.. எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள்.

உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளாகிவிட்டனர். தனக்கு பால் சுரக்கட்டும் என, அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.

தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிசைக்கு வந்தனர். நடந்ததை கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அத்திரி மகரிஷி. உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி, மறைந்தனர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்த்ரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்துக் வழங்கப் பெறுகிறார்.

அத்ரி மகரிஷி-அனுசூயை தம்பதியரின் மகனாக பிரம்மா, விஷ்ணு, மகேசன் ஆகிய மூவரின் ஒருங்கிணைந்த அம்சமாக தத்தாத்ரேயர் அவதார மகிமை போற்றப்படுகிறது. சதுர்யுகத்தில் திரேதாயுகத்தின் ஆரம்ப காலத்தில் தத்தாத்ரேயர் அவதாரம் நிகழ்வுற்றதாகப் புராணங்கள் சொல்கின்றன. தத்தாத்ரேயர் இன்றும் சூட்சுமமான யோக வடிவில் உலவி வருகிறார்.

தத்தாத்ரேயர், மும்மூர்த்திகளின் சொரூபமாதலால், மூன்று திருமுகங்களும் ஆறு திருக்கரங்களும் உடையவராக வழிபடப்படுகிறார். ஆறு திருக்கரங்களில், பிரம்ம தேவரை குறிக்கும் கமண்டலம்-ஜபமாலை, சிவபெருமானைக் குறிக்கும் திரிசூலம்-உடுக்கை, ஸ்ரீவிஷ்ணுவைக் குறிக்கும் சங்கு-சக்கரம் முதலியவற்றைத் தாங்கி அருளுகிறார்.

அவர் திருப்பாதங்களின் அருகில் இருக்கும் நான்கு நாய்களும் நான்கு வேதங்களைக் குறிக்கும். வேதங்களால் அறியப்படும் பரமபுருஷன் ஒருவரே என்பதை, இந்த நான்கு நாய்களும் அவரது திருவடிகளின் அருகில் இருப்பது குறிக்கிறது. ஸ்ரீதத்தரின் பின்புறம் இருக்கும் பசு, பூமி, படைப்புத் தொழிலையும் குறிக்கும்.

ஸ்ரீதத்தாத்ரேயர், மிகச் சிறு வயதிலேயே தம் இல்லம் விட்டு வெளியேறி, பிரம்ம ஞானத்தை அடைவதற்காக, பல்வேறு இடங்களுக்குச் சென்றார். கர்நாடகாவில் உள்ள கங்காபுரம் என்னும் ஊரில் பிரம்மஞானத்தை அடைந்ததாக கூறப்படுகிறது. இவரது பத்தினி அனகா தேவி. அனகாதேவி. விரதம் மிகப் பிரபலமானது. இதைக் கடைபிடிக்கும் தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

உலகில் அவதரித்த சதாசிவபிரும்மேந்திரர், சாய்பாபா போன்ற பல மகான்கள் தத்தாத்ரேயரின் அவதாராமாக கருதப்படுகின்றனர்.
Tags:    

Similar News