ஆன்மிகம்
ஓணம் பண்டிகை

இன்று ஓணம் பண்டிகை- உலகளந்த உத்தம அவதாரம்

Published On 2019-09-11 04:08 GMT   |   Update On 2019-09-11 04:08 GMT
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத் திருநாள் அன்று மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருகிறார். அவரை வரவேற்கும் விதமாகவே கேரள மக்கள் 10 நாட்கள் திருவிழாவாக ஓணம் பண்டிகையை நடத்துகின்றனர்
திருமாலின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்டவையாகும். பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவமே வாமன அவதாரம். தன் சிறிய காலடியால் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து மகாபலியின் ஆணவத்தை அழித்த இது, திருமாலின் ஐந்தாவது அவதாரமாகும்.

பிரகலாதனுடைய பேரனும், விராசனின் மகனுமான பலி என்னும் அசுரராஜன் சக்கரவர்த்தியாக முடிசூட்டி தம் மூதாதையர்கள் போல தனித்துவமாக ஆட்சி செய்து வந்தான். இவனது ஆட்சிப்பகுதி கேரளா மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளாகும். நல்லாட்சி நடத்தி மக்களின் அபிமானத்துக்குரியவனாக இருந்தபோதிலும், அவ்வப்போது தலைதூக்கும் அசுரகுணத்தால் இவன் தவறு செய்வதுண்டு.

ஒருசமயம் எதிர்கொள்ளப் போகும் விளைவுகளை மறந்து, இந்திரன் மீது போர்தொடுத்தான். அப்போரில் அவன் இந்திரனிடம் தோற்றான். அந்த தோல்வி பலியை தூங்கவிடாமல் செய்தது. அதனால் மீண்டும் பலம் பெற்று எப்படியாவது தேவர்களை வெல்ல வேண்டும் என்று நினைத்தான்.

அதற்காக பிருகு வம்சத்தில் தோன்றிய சுக்ராச்சாரியார் போன்ற அந்தணர்களை அணுகி ஆலோசனை கேட்டான். அவர்கள், ‘விக்ரஜித்’ என்ற ஒரு பெரிய வேள்வியை நடத்தும்படி உபதேசம் செய்தார்கள். சுக்ராச்சாரியாரைக் கொண்டு அவ்வேள்வியை செய்தான். அதிலிருந்து ஓர் தங்கரதம் வெளிப்பட்டது. அந்த ரதத்தில் கணக்கற்ற வில்லும், அம்பும், கவசமும் வைக்கப்பட்டிருந்தன. சுக்ராச்சாரியாருடைய ஆசியை பெற்று கவசத்தைத் தரித்துக் கொண்டு, அசுர சேனைகள் சூழ தேவலோகம் சென்றான்.

இந்திரன் முதலான தேவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல், பிரகஸ்பதியிடம் ஆலோசனை கேட்டனர். அதற்கு அவர், “பலி இப்போது அதிக பலத்துடன் வருகிறான். அவனை வெல்வது கடினம். எனவே எல்லாரும் எங்காவது சென்று மறைந்து கொள்ளுங்கள். நாராயணரை சரணடையுங்கள்” என்றார். அதன்படியே தேவர்கள் அனைவரும் சென்று திருமாலிடம் சரணடைந்தனர்.

இதற்குள் மூன்று உலகங்களையும் கைப்பற்றிய பலி, அமராவதியிலேயே தங்கி மூன்று உலகங்களையும் ஆண்டு வந்தான். அவன் தீவிர திருமால் பக்தன் என்பதால், அந்தணர்களும் மகரிஷிகளும் தத்தம் கர்மாவை குறைவின்றி நடத்திக் கொள்ள வழி வகைசெய்து கொடுத்தான். அதனால் அனைவரும் அவனைப் போற்றிப் புகழ்ந்து அவனுக்கு உறுதுணையாய் இருந்தனர். மேலும் இந்தப் பதவியில் இருந்து விலகாமல் இருக்க நூறு அசுவமேத யாகங்களைச் செய்யும்படி பலியை அறிவுறுத்தினர்.

அதன்படி அசுவமேத யாகம் செய்ய முன்வந்தான் மகாபலி. இதையடுத்து அவனை தடுத்து நிறுத்தும்படி நாராயணரை வேண்டி நின்றனர் தேவர்கள். “பெருமாளே! மகாபலி சக்கரவர்த்தி செய்யப்போகும் வேள்வி நிறைவடைந்து விட்டால், அவனை வெல்ல யாராலும் முடியாது. அதனால் தேவர்களான எங்களுக்கு பெரும் ஆபத்து வரும் என்று அஞ்சுகிறோம். எனவே மகாபலி சக்கரவர்த்தி நடத்தும் வேள்வியை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றனர்.

தேவர்களை காப்பது தன் கடமை என்பதால் அவர்களுக்கு உதவ முன்வந்தார், திருமால். அதே நேரத்தில் மகாபலியின் சிறப்பை உலகம் அறியச் செய்யவும் அவர் சித்தம் கொண்டார்.

“இந்திரனே! நான் காசியப முனிவரின் மகனாக பிறந்து, தக்க நேரத்தில் உங்களை காத்தருள்வேன். கவலை வேண்டாம்” என்று அருளினார்.

தேவர்களுக்கு அருளியபடியே வாமன (குள்ளமான) அவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு. 3 அடி உயரமே கொண்ட வாமனர், ஒரு கையில் தாழம்பூ குடையும், மற்றொரு கையில் கமண்டலமுமாக மகாபலி சக்கரவர்த்தி வேள்வி நடத்தும் இடத்திற்குச் சென்றார். அப்போது வேள்வி நிறைவடையும் தறுவாயில் இருந்தது.

வாமனரைப் பார்த்ததும் வேள்வியில் இருந்து எழுந்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, “அந்தணரே! தான தருமங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வந்துள்ளீர்களே!” என்று கேட்டான்.

அதற்கு வாமனர், “நான் வர சற்று தாமதம் ஆகி விட்டது. இருப்பினும் எனக்கு பெரிய தானங்கள் எதுவும் தேவையில்லை. என் காலைக் கொண்டு நான் அளக்க, இந்த உலகில் மூன்று அடி மண் கொடுத்தால் போதும்” என்றார்.

அவரது வேண்டுதலை தட்டமுடியாமல் தானம் கொடுக்க ஒப்புக்கொண்டான் மகாபலி. ஆனால் சுக்ராச்சாரியாருக்கு ‘வந்திருப்பது மகாவிஷ்ணுவின் அவதாரம்’ என்பது தெரிந்துவிட்டது. அவர், “மகாபலி! வந்திருக்கும் அந்தணரின் மேல் எனக்கு சந்தேகமாக உள்ளது. அவர் திருமாலின் அவதாரமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. எனவே தானம் கொடுப்பதில் அவசரம் வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.

மகிழ்ச்சியில் திளைத்தான் மகாபலி. “குருவே! என்னிடம் தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால், இதைவிட பெரிய பேறு எனக்கு என்ன இருக்கப் போகிறது” என்று கூறியவன், கமண்டலத்தை எடுத்து நீர் வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான். இனி அவனை தடுக்க முடியாது என்பதை அறிந்த சுக்ராச்சாரியார், தும்பி (வண்டு)யின் உருவம் கொண்டு கமண்டலத்திற்குள் புகுந்து, நீர் வரும் வழியை அடைத்துக்கொண்டார்.

இதைப் பார்த்த வாமனர், தர்ப்பைப் புல் ஒன்றை எடுத்து நீரை அடைத்திருந்த வண்டை நோக்கி குத்தினார். இதில் சுக்ராச்சாரியாரின் கண் பார்வை பறிபோனது. மகாபலி சக்கரவர்த்தி நீர் வார்த்து தானத்தை கொடுத்தான். பின்னர் தங்களுக்கு உரிய நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று வாமனரை நோக்கி கூறினான்.

இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து வானுயரத்திற்கு உயர்ந்தார். இதைப் பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப் போய் நின்றான் மகாபலி சக்கரவர்த்தி. உயர்ந்து நின்ற வாமனர் முதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார். பின்னர் மகாபலியிடம், “சக்கரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?” என்று கேட்டார்.

“இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்” என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தினான். மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார்.

பின்னர் “மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டை வளம் பெறச் செய்தாய். அதனால் நீ பெற்ற பலன்கள் அனைத்தும் உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கிய தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய்” என்று அருளினார்.

பாதாளத்திற்கு சென்ற மகாபலி சக்கரவர்த்தி, “திருமாலே! நான் என் நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் மிகுந்த பற்று வைத்திருக்கிறேன். அதைத் தாங்களும் அறிவீர்கள். எனவே வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நான் என் நாட்டிற்கு வந்து என் மக்களின் சிறந்த வாழ்க்கையை பார்க்க அனுமதிக்க வேண்டுகிறேன்” என்றான்.

“அப்படியே ஆகட்டும்” என்று ஒப்புதல் அளித்தார் மகாவிஷ்ணு.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத் திருநாள் அன்று மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருகிறார். அவரை வரவேற்கும் விதமாகவே கேரள மக்கள் 10 நாட்கள் திருவிழாவாக ஓணம் பண்டிகையை நடத்துகின்றனர்.

நெய்வாசல் நெடுஞ்செழியன்
Tags:    

Similar News