ஆன்மிகம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது

Published On 2019-08-24 06:21 GMT   |   Update On 2019-08-24 06:21 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 11 நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், நடைதிறந்து திருவிளக்கேற்றுதல், 5 மணிக்கு சிறப்பு பணிவிடை, காலை 6 மணிக்கு கொடி பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ சிவா, அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியை பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு ராஜவேல், பாலலோகாதிபதி, ஜனா யுகேந்த், ஜனாவைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத் தொடர்ந்து அய்யாவின் வாகன பவனி, நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம், இரவு 8 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கொடியேற்றத்தையொட்டி தலைமைப்பதியின் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சி படிப்பு, இரவு வாகன பவனி, யுகப்படிப்பு தொடர்ந்து அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந் தேதி அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடி சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News