ஆன்மிகம்

கருணை தெய்வம் எங்கள் சாய்பாபா

Published On 2019-06-23 07:35 GMT   |   Update On 2019-06-23 07:35 GMT
சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சிட்டுக்குருவியின் காலில் கயிற்றை கட்டி இழுப்பது போல பக்தர்களை என் பக்கம் இழுப்பேன் என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வதுண்டு. அதை உறுதிபடுத்துவது போல சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு. சிலருக்கு பாபாவை பற்றி துளி அளவு கூட எந்த விஷயமும் தெரிந்திருக்காது. ஆனால் அவர்களை மிகக்குறுகிய காலத்தில் சாய்பாபா தனது அதிதீவிர பக்தனாக மாற்றி இருக்கிறார்.

இதற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் உதாரணங்களாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சென்னையிலும் எத்தனையோ பேரை சாய்பாபா இப்படி தனது அருள் வலைக்குள் கொண்டு வந்து இருக்கிறார். அவர்களில் பலர் சாய்பாபாவுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆலயங்களை உருவாக்கி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

சிலர் ஆலயங்களை உருவாக்கியதோடு மட்டுமின்றி சாய்பாபாவை நெருங்குவது எப்படி? வழிபாடு செய்வது எப்படி? அப்படி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை சாதாரண பக்தர்களுக்கு தெரிவிக்கும் உன்னதமான பணிகளையும் செய்து வருகிறார்கள். அவர்களில் சீரடி சாய்பாபா அறக்கட்டளை அமைத்து தி.நகரில் ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான-பிரார்த்தனை மையம் நடத்தி வரும் பேராசிரியர் திருவள்ளுவன் வித்தியாசமானவர்.

இவர் சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். 2004&ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் 2001&ம் ஆண்டு அவரை சீரடி சாய்பாபா ஆட்கொண்டார். அதற்கு முன்பு வரை சீரடி சாய்பாபாவை பற்றி ஒரு துளி அளவுக்கு கூட பேராசிரியர் திருவள்ளுவனுக்கு எந்த தகவலும் தெரியாது.

அப்படி இருக்கும் போது சீரடி சாய்பாபாவின் அருள் மழையில் அவர் நனைய நேரிட்டது எப்படி என்பது ஆச்சரியமானது. இதுபற்றி பேராசிரியர் திருவள்ளுவன் மலரும் நினைவுகளாக கூறியதாவது:-

2001&ம் ஆண்டு கல்லூரியில் என்னுடன் பணிபுரிந்த சாய்ராம் என்பவர் என்னை சீரடிக்கு அழைத்தார். அவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர். சாய்பாபா மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அவருடன் நானும், எனது மனைவியும் சீரடிக்கு சென்றோம்.



சீரடியில் பாபாவின் சமாதி மந்திருக்கு என்னை அழைத்து சென்றனர். அங்கு நிறைய பேர் அமர்ந்து பாபாவை புகழ்ந்து பாட்டுபாடிக் கொண்டிருந்தனர். நான் ஒரு ஓரமாக போய் உட்கார்ந்தேன். எனக்கு எதுவுமே புரியவில்லை. பாபா சமாதியில் வழிபட்ட பிறகு சென்னைக்கு திரும்பிவிட்டோம். அதன் பிறகு நான் பாபாவை சுத்தமாக மறந்து விட்டேன்.

இதற்கிடையே பி.எச்.டி. படித்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதால் அதை செய்து முடிக்க திட்டமிட்டேன். எனக்கு சினிமாவில் அதிக ஆர்வம் இருந்ததால் சினிமா தொடர்பாக ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து பி.எச்.டி. முடிக்க நினைத்தேன். அப்போது என்னுடன் பணிபுரிந்த பேராசிரியர் சாய்ராம், “நீங்கள் ஏன் சினிமா தலைப்பை எடுக்கிறீர்கள். சீரடி சாய் பாபாவை பற்றி ஆய்வு செய்து பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெறலாமே” என்று கூறினார்.

நானும் அதை ஏற்றுக் கொண்டேன். சீரடி சாய்பாபா பற்றிய புத்தகங்களை தேடி தேடி சேகரித்தேன். ‘பாபாவின் வாழ்க்கை வரலாறு&ஒரு ஆய்வு’ என்ற தலைப்பில் பி.எச்.டி. ஆய்வுக்காக பதிவு செய்தேன். பாபாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் தொடர்பான புத்தகங்களை படிக்க படிக்க ஆச்சரியமாக இருந்தது. அவர் மெல்ல மெல்ல என் மனதுக்குள் ஊடுருவினார். அந்த சமயத்தில் கல்லூரி முதல்வர் நான் சீரடி சென்று பாபா ஆலயத்தில் உள்ள நூலகத்தில் புத்தகங்கள் பெறுவதற்கு அனுமதி வழங்கினார். அதன் பேரில் நான் சீரடி செல்ல முடிவு செய்தேன். அப்போது பாபா ஒரு அதிசயம் நிகழ்த்தினார்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர் நான் சீரடி செல்வதை அறிந்து என்னை பார்க்க வந்தார். அவர் என்னிடம், “சீரடியில் இருந்து ஷிண்டே என்பவர் வந்திருக்கிறார். அவருடன் சீரடிக்கு செல்லுங்கள். உங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அவர் பார்த்துக் கொள்வார்” என்று கூறினார். அதன்படி ஷிண்டேவுடன் நானும் நண்பர் பல்லவ ராஜாவும் சீரடிக்கு சென்றோம். அங்கு சாய்பாபா ஆலயத்தின் பி.ஆர்.ஒ. லட்சுமன் சகானே எனக்கு அறிமுகமானார். அவர் மூலம் எனக்கு நிறைய புத்தகங்கள் கிடைத்தது.

லட்சுமன் சகானே என்னை அவரது வீட்டுக்கும் அழைத்து சென்று பாபா பற்றிய புத்தகங்கள் கொடுத்தார். பிறகு சமாதி மந்திருக்குள் சென்று சாய்பாபாவை வழிபடுவதற்கும் ஏற்பாடு செய்தார். சமாதி மந்திரில் பாபா சிலை அருகே வெள்ளித்தூண் பகுதியில் நின்று நான் பாபாவை வழிபட்டேன். அப்போது பாபாவுக்கு நடந்த ஆரத்தி பூஜையில் மெய் மறந்தேன்.

அன்று இரவு என் வாழ்க்கையில் மேலும் ஒரு அதிசயத்தை பாபா நிகழ்த்தினார். என்னுடன் வந்திருந்த பல்லவராஜா தான் கொண்டு வந்திருந்த பாபா படத்தை காண்பித்து இதே போன்று இன்னொரு படம் வேண்டும் என்று சீரடி முழுக்க தேடினார். நாங்கள் அப்துல் பாபா காட்டேஜுக்கு சென்று விசாரித்தோம். அப்போது அங்கு இருந்த அப்துல் பாபாவின் கொள்ளு பேரன் “இரவு 10 மணிக்கு வாருங்கள் தருகிறேன்” என்று கூறினார்.

அவர் சொன்னபடி நானும், எனது நண்பரும் இரவு 10 மணிக்கு அப்துல் பாபா வாழ்ந்த வீட்டுக்கு சென்றோம். எங்களை கண்டதும் அவரது கொள்ளு பேரன் கனிபாய் உள்ளே அழைத்து சென்றார். ஒரு கதவை திறந்து பழைய இரும்புபெட்டியை எடுத்து வந்தார். அந்த பெட்டிக்குள் பாபா தினமும் 5 வீடுகளில் பிச்சை எடுக்க பயன்படுத்திய பாத்திரம், அவர் படித்த குரான், சட்கா ஆகியவை இருந்தன. அவற்றை தொட்டு வணங்க சொன்னார். எனக்கு என்னையே நம்ப முடியவில்லை. சாய்பாபா மகா சமாதி அடைந்ததும், அவர் பயன்படுத்திய பொருட்களைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற 7&வது நபர் நீங்கள் என்றார்கள். நான் ஆடிப்போய் விட்டேன்.

ஆச்சரியத்தில் மூழ்கி இருந்த எனக்கு பாபா மேலும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தார். அந்த சூட்கேசுக்குள் இருந்த பிச்சைப்பாத்திரத்துக்குள் கிடந்த ஒரு நாணயத்தை எடுத்து கனிபாய் எனக்கு கொடுத்தார். அது பாபா பயன்படுத்திய நாணயம் ஆகும். அந்த நாணயத்தை தொட்ட வினாடியே நான் பாபாவிடம் முழுமையாக என்னை ஒப்படைத்துவிட்டேன். பாபா என்னை தூண்டில் போட்டு இழுத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

மறக்க முடியாத இந்த நிகழ்வுகளுடன் நான் சென்னை திரும்பினேன். அதன்பிறகு சாய் பாபா ஆலயத்தின் பி.ஆர்.ஓ. லட்சுமன் சகானே ஒரு தடவை சென்னை வந்தார். அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் நானும், பல்லவ ராஜாவும் செய்து கொடுத்தோம். இந்த சமயத்தில் தீபாவளி பண்டிகை வந்தது. தனது சகோதரர் சிகிச்சைக்காக சென்னை வந்திருந்த லட்சுமன் சகானே தீபாவளிக்கு மறுநாள் சீரடியில் நடக்கும் லட்சுமி குபேர பூஜைக்காக செல்ல வேண்டும் என்று நினைத்தார்.

ஆனால் அவரால் செல்ல முடியவில்லை. இந்த நிலையில் தீபாவளி தினத்தன்று எனது வீட்டுக்கு வந்த லட்சுமன் சகானே பூஜை அறையில் அமர்ந்து லட்சுமி பூஜையை செய்தார். எனது வீட்டில் தீபாவளி தினத்தன்று லட்சுமி பூஜை நடத்த வேண்டும் என்பதற்காக பாபாவே அவரை அனுப்பி வைத்ததாக எனக்கு தோன்றியது. உடலில் சிலிர்ப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சாய்பாபா ஆலயத்தின் பி.ஆர்.ஓ. லட்சுமன் சகானேக்கும், எனக்கும் நல்ல நட்பு உருவானது. நான் அடிக்கடி சீரடிக்கு சென்றேன். அந்த கால கட்டத்தில் 60 தடவைக்குமேல் நான் சீரடிக்கு சென்றிருப்பேன். ஒவ்வொரு தடவையும் எனக்கு சாய்பாபா ஒவ்வொரு அற்புதங்களை நிகழ்த்தினார். பட்டியல் இட முடியாத அளவுக்கு பாபாவின் அற்புதங்கள் என் வாழ்வில் உள்ளன.

இந்த நிலையில் எனது நண்பர் ராமச்சந்திரன் என்பவர் சத்சங்கம் தொடங்க போவதாக கூறினார். அப்போது எனக்கு சத்சங்கம் என்றால் என்னவென்றே தெரியாது. என்றாலும் பாபாவின் மீதுள்ள பற்றுதலால் லட்சுமி நரசிம்மர் என்பவரின் உதவி பெற்று பாபாவுக்கு ஒரு கோவில் ஆரம்பித்து வழிபாடுகளை தொடங்கினோம். அதன் பிறகு என் வாழ்க்கையில் சில சோதனைகள் ஏற்பட்டது. என்னைப் புடம் போட்ட தங்கமாக மாற்ற பாபாவே அந்த சோதனைகளை எனக்கு தந்தார். அந்த சோதனைகள் பாபா வழிபாட்டு முறைகளில் என்னைப் பட்டை தீட்டின.

அலை அலையாக வந்த சோதனைகள் என்னை பக்குவப்படுத்தின. நான் என்ற அகந்தை முடிவுக்கு வந்தது. பாபா ஆலயத்திற்கு சென்று வந்த பிறகு எனக்குள் ஏற்பட்டிருந்த ஈகோவும் அழிந்தது. இதற்கிடையே எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்பட்டது. ஆனால் அத்தனை எதிர்ப்புகளையும் சாய் பாபா தவிடுபொடியாக்கினார்.

பாபாவின் கொள்கைகளை தெரிந்து கொண்டு முழுமையாக கடைபிடிக்க முடிவு செய்தேன். அது என்னை புது மனிதனாக மாற்றியது. அதன் பிறகுதான் தி.நகர், சரோஜினி தெருவில், ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான&பிரார்த்தனை மையத்தை தொடங்கினேன்.அந்த தியான, பிரார்த்தனை மையம் ஆரம்பித்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இந்த 15 ஆண்டுகளில் இந்த மையத்தில் பாபா தினம், தினம் அற்புதம் செய்து கொண்டிருக்கிறார். இந்த தியான மையத்தில் துன்ப படுபவர்களின் துயர் துடைக்கும் சாய்பாபா அருளி செய்த வழிபாட்டு முறைகள் கடைபிடிக்கபடுகின்றன.

இந்த தியான மையத்தின் நோக்கமே சாய்பாபா காட்டும் வழிகளை உங்களுக்கு சுட்டிகாட்டி அந்த வழியில் அழைத்து செல்வதுதான். இந்த தியான மையத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் பலன் பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள சாய்பாபா வழிபாட்டு மையங்களில் இந்த பிரார்த்தனை மையம் சக்தி வாய்ந்தது.

ஒரு பக்தன் எதை நினைத்து தியானம் செய்கிறானோ அதை இந்த மையம் மூலம் நிச்சயமாக பெற முடிகிறது. மனதில் பாரத்துடன் வருபவர்கள், திரும்பிப் போகும் போது மனம் இலவம் பஞ்சாக லேசானது போல மகிழ்ந்து செல்கிறார்கள். அதற்கு காரணம் இந்த தியான பிரார்த்தனை மையத்தில் சாய்பாபாவின் அருள் அலைகள் முழுமையாக நிரம்பி இருப்பதுதான்.

(சாய்பாபாவின் அற்புதங்களை தெரிவித்த பேராசிரியர் திருவள்ளுவனை 87782 50863 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.)
Tags:    

Similar News