ஆன்மிகம்

ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

Published On 2019-06-12 06:54 GMT   |   Update On 2019-06-12 06:54 GMT
சோழவந்தான் பிரசித்திபெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. இந்த கோவிலில் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெற்று, 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவையொட்டி கோவிலில் அர்ச்சகர் சண்முகவேல் கொடியேற்றுவதற்கான பொருட்களை எடுத்துக்கொண்டு மேளதாளத்துடனும், ஏராளமான பக்தர்களுடனும் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதியில் பவனி சென்று கொடி மரத்தில் திருவிழா கொடியேற்றினார்.

பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. இந்த விழாவில் உபயதாரர் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை பிரசாதம் வழங்கினார். முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் வாடிப்பட்டி கிருஷ்ணவேணி பாண்டி, சோழவந்தான் கலாவதி ராஜா, உதவி தலைவர் அண்ணாதுரை, முன்னாள் அறங்காவலர் ஜோதிராஜூ, தக்கார் மாரியப்பன், செயல் அலுவலர் சுசீலா ராணி, ஆலயப் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கவுதம் விஜய், அய்யரு மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருவிழாவின் 2-ம் நாளான நேற்று பூமேட்டுத்தெரு கிராமத்தின் சார்பில் கிராம தலைவர் மணி என்ற முத்தையா முன்னிலையில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, உச்சி காளியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு அம்மனுக்கு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் இரவு அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். 3-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதலும், இரவு யாழி வாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News