ஆன்மிகம்

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருநள்ளாறு கோவிலில் இன்று தேரோட்டம்

Published On 2019-06-12 03:10 GMT   |   Update On 2019-06-12 03:10 GMT
பிரம்மோற்சவ விழாவையொட்டி திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க தர்பாராண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சியின் போது ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் பிரம்மோற்சவ விழா முக்கியமானதாகும். கடந்த மே மாதம் 29-ந் தேதிகொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு பஞ்சமூர்த்திகள் ரிஷபவாகனத்தில் சகோபுர வீதியுலா நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பாள் சமேத தர்பாரண்யேஸ்வரர் மற்றும் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு சுவாமி வீதியுலா நடந்தது.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள், நிர்வாக அதிகாரி (கோவில்கள்) சுந்தர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.
Tags:    

Similar News