ஆன்மிகம்
குண்டம் இறங்குவதற்காக வந்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.

கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா: குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Published On 2019-03-20 03:57 GMT   |   Update On 2019-03-20 03:57 GMT
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து கிராம சாந்தி, அபிஷேக பூஜை, அம்மன் திருவீதி உலா, குதிரை வாகன காட்சி, மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. மேலும் குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு கோவிலில் காப்பு கட்டப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது.

குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக திருப்பூர், ஊத்துக்குளி, குன்னத்தூர், நம்பியூர், அவினாசி உள்பட சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் மாலை முதலே தீச்சட்டி ஏந்தி நடைபயணமாக கோவிலுக்கு வந்தனர்.

இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணிக்கு குண்டம் இறங்க தொடங்கிய பக்தர்கள் காலை 10.30 மணி வரை குண்டம் இறங்கினார்கள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினார்கள். அப்போது ஒருசில பக்தர்கள் கும்பம், காவடி மற்றும் தங்களது குழந்தைகளுடனும் குண்டம் இறங்கினார்கள். மாற்றுத்திறனாளி பக்தர்கள், போலீசார் சிலரும் சீருடையில் குண்டம் இறங்கினார்கள்.
Tags:    

Similar News